Saturday, November 7, 2009

மாணவர்களின் பூரண சுகாதாரத்தில் விளையாட்டின் முக்கியத்துவம்



பாடசாலை மாணவர்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பான விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாதவர்களாகவே இருக்கிறார்கள். நவநாகரிகப் பாணியையும் , நவீன மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் விடயத்திலும் காட்டும் அக்கறையில் பாதியளவு கூட தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் காட்டுவதில்லை.

அத்துடன், உள . சமூக ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும்
மாணவர்கள் பலர் காணப்படுகிறார்கள். மாணவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகியுள்ளது.



நாட்டின் நாளைய தலைவர்கள் மாணவர் சமுதாயமாகும். வருங்காலத் தலைவர்களான இவர்களின் பூரண ஆரோக்கியத்தில் தான் மாணவர்களினதும் இது அவர்களிளது குடும்பபத்தவர்களதும் இந் நாட்டினதும் எதிர்காலம் தங்கியுள்ளது.
கல்வியின் பிரதான குறிக்கோள் நாட்டிற்கு இயைந்த நற்பிரஜைகளை உருவாக்குவதாகும்.எதிர்கால நற்பிரஜைகள் ஆரோக்கியம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
தனி நபர் ஒருவர் உளரீதியாக மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்திகரமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு தனி நபர் ஒருவருக்குள்ள ஆற்றலே பூரண சுகாதாரம் அல்லது நிறைவான சுகாதாரம் எனப்படும்.

இன்னொரு வகையில் கூறுவதாயின் உடல் ஆரோக்கியம் இ உள ஆரோக்கியம் , சமூக ஆரோக்கியம் ஆகியவற்றின் கூட்டே பூரண சுகாதாரம் எனப்படும்.

சுகாதாரம் எனப்படுவது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பூரண ஆரோக்கியத்தை பெற்றிருத்தலாகும்.
பூரண ஆரோக்கியமுடைய ஒருவராலேயே சிறந்த நற்பிரஜையாகவும் திகழ முடியும். ஆயினும் மாணவர்களிள் பூரண சுகாதாரத்தைப் பாதிக்கும் பல காரணிகள் இருக்கின்றன.

1. நீண்ட காலம் தொடரும் உள்நாட்டு யுத்தம்.
2. மக்களின் இடப்பெயர்வூம் அகதி வாழ்வூம்.
3. குடும்ப பொருளாதார நிலை
4. நாளுக்கு நாள் அதிகாரித்து செல்லும் வாழ்க்ச்கைச் செலவு
5. பொருளாதார சுமை
6. வெகுஜன ஊடகங்களின் தாக்கம்.
7. சனநெருக்கடியான சூழல்
8. குடியிருப்பு வசதிக் குறைபாடு
9. மாசடைந்த சூழல்
10. உணவு வகைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
11. சுய சுகாதாரத்தில் உள்ள குறைபாடுகள்
12. போசாக்குக் குறைபாடு
13. சுத்தமான குடி நீர் எல்லோருக்கும் கிடைக்காமை
14. பொழுது போக்கு வசதியின்மை
15. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடாமை
16. குடும்பத்தொகுதியினது அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
17. கல்வி முறையில் உள்ள போட்டித் தன்மை
18. முழு நேரக் கற்றலில் மாணவர்கள் ஈடுபடுதல்
19. இணைபாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடாமை
20. சூழலினதும் சமூகத்தினதும் அமுக்கம்
21. பெற்றோர்களின் கட்டுப்பாடு அல்லது பூரண சுதந்திரம்
22. உணவு ஆரோக்கிய விடயத்தில் போதிய கவனம் செலுத்தாமை.


இவற்றில் பிராதான காரணிகளில் ஒன்று தான் மாணவர்கள் விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமையாகும்.

பொதுவாக மாணவர்கள் பல்வேறு சூழல்களிலிருந்து பாடசாலைக்கு வருபவர்களாக இருப்பார்கள். அவர்களின் வீட்டுச் சூழலும், சுற்றுப்புறச் சூழலும் பல்வேறுபட்டதாக இருக்கும். பெரும்பாலான மாணவர்களின் இவ்விரு சூழல் நிலைகளும் மாணவர்களின் பூரண ஆரோக்கியத்திற்கு பொருத்தமற்றதாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் விளையாட்டு , உடற் பயிற்சிகளில் ஈடுபடுதல் என்பதும் மாணவர்களுக்கு சிக்கலான தொன்றாகவே இருக்கிறது. ஆயினும் அதற்கான காரணிகள் கண்டறியப் பட்டு உரிய வழிவகைகளும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

பாட விதானத்திலும் இணைப்பாடவிதானத்திலும் இவ்விடயத்திற்கு உரிய முக்கித்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல் காரணமாகவூம் வசதியீனங்கள் காரணமாகவூம் , அசிரத்தைக் காரணமாகவும் உரிய வகையில் அவை நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதனால் இறுதியில் மாணவர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

சுகாதாரமும் உடற்கல்வியும் பாட புத்தகத்தில் பல பாட அலகுகள் உள்ளன. அவற்றில் சில செயன் முறைப் பயிற்சிகள் சாHந்த பாட அலகுகளாகும். அவற்றை ஒரு ஆசிரியர் முழுமையாக கற்பிப்பாராயின் மாணவர்களின் உடற்கல்விப்பாட அடைவினை மேம்படுத்தலாம்.

ஆயினும் பெரும்பாலான பாடசாலைகளில் செயன் முறைபப்பயிற்சி சார்ந்த பாட அலகுகள் கற்பிக்கப்படுவதில்லை. அத்துடன் இப்பாட அலககள் அவற்றுக்கு உரிய பாட வேளைகளின் அளவுக்கு ஏற்ப கற்பிக்கப் படுவதுமில்லை.

பல பாடசாலைகளில் உடற் கல்விப்பாட ஆசிரியர்கள் இன்மை, மைதான வசதியின்மை, உபகரணங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் செயன் முறைப் பயிற்சி சார்ந்த பாட அலகுகள் முழுமையாக கற்பிக்கப் படுவதில்லை. சில ஆசிரியர்கள் அப்பாட அலகுகளை வகுப்பறையில் மாத்திரம் கற்பிக்கிறார்கள்.மைதானத்திற்கு அழைத்துச் செல்வதில்லை.

இதன் காரணமாக மாணவர்களுக்கு இப்பாடம் பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டுள்ளதன் நோக்கம் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விளையாட்டு , உடற்பயிற்சி விடயத்திலும் , உடற்றகைமையை வளர்த்துக் கொள்ளும் விடயத்திலும் மாணவர்கள் உரிய அறிவூம் தெளிவும் பெறாமல் இருக்கிறார்கள்.

பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடம் முக்கியமானதாகும்.

இப்பாடம் ஆசிரியரால் முறையாகக் கற்பிக்கப்படுமாயின் மாணவர்கள் இப் பாடத்தில் உரிய அடைவினை அடைவார்கள். ஆயினும் உரிய அடைவினை எய்துவதாக இருந்தால்; ஆசிரியர்களின் பங்களிப்பு மட்டும் போதாது. உரிய பௌதீக வளங்கள் இருப்பதோடு, மாணவர்களும் இப்பாடத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு கற்று பயனடைபவர்களாக இருக்க வேண்டும்.

இப்பாடத்தினூடாக ஒரு மாணவன் பூரண சுகாதாரம் பற்றிய பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதுடன் அச்சுகாதார நிலை தன்னில் ஏற்படவூம் , மற்றும் தன்னில் மாற்றங்களை காணவும்; துணிகின்றான். அதற்காக தனது பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறான்.

உடலாரோக்கியம் , உள ஆரோக்கியம் ,சமூக ஆரோக்கியம் ஆகியன மணவர்கள் இப்பாடத்தினூடாக எய்தும் பிரதான அடைவுகளாகும்.

உடற் கல்விப்பாட அடைவினை மேம் படுத்துவதினூடாக மாணவர்களை பூரண சுகாதாரம் உடையவர்களாக ஆக்கலாம்.அதன் காரணமாக மாணவர்களின் உடற்றகைமை மேன்மையடையச் செய்யலாம்.

கல்வித்தகைமை போன்றே உடற்றகைமையூம் மனிதனுக்கு அவசியமானது. உடற் சுகாதாரத்தின் பிரதான பண்புகளில் உடற்றகைமையூம் ஒன்றாகும்.
இந்த உடற்றகைமையை ஒருவரிடத்தில் கட்டி எழுப்ப வேண்டுமாயின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் அல்லது யோகாசனத்தில் ஈடுபட வேண்டும்.

உடலாரோக்கியத்தை விருத்தி செய்து கொள்வதற்கும் நற்பண்புகளையும் , விழுமியங்களையும் விருத்தி செய்து கொள்வதற்கும் , சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கும் வேண்டிய பண்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் விளையாட்டுக்கள் அவசியமாகின்றன.

விளையாட்டுத் திடலில் புகும் விளையாட்டு வீரர் மத ரீதியிலோ , குல அடிப்படையிலோ , இனங்களுக்கு அமையவோ பிரிந்து விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை.

தேசிய ஒற்றுமையையும் , மத ஒற்றுமையையும் பெரிதும் மதிக்கும் இலங்கை மக்களான நாங்கள் மேற்படி எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து கொள்வதற்காக விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும்.
அத்துடன் விளையாட்டில் ஈடுபடுவதினூடாகவே வெற்றி தோல்விகள் மாறி மாறி கிடைக்கின்றன. இதன் காரணமாக வாழ்வில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆற்றல் மாணவர்களிடத்தில் ஏற்படுகிறது. வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பண்பும் இதனால் ஏற்படுகிறது.


உடல் ஆரோக்கியம் பற்றி சமயங்கள் கூறுவதென்ன?


இஸ்லாம்- சுத்தம் ஈமானின் (நம்பிக்கையின்) பாதி எனவும் சுகம் ஓர் அருங்கொடை எனவூம் கூறுகிறது.

இந்து சமயம்- நோயற்றிருத்தல் பற்றியும் மகிழ்ச்சியுடன் இருத்தல் பற்றியூம் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன.சுத்தம் , உடற்றகைமை,சரியான உணவு வகைகளைப் பெறல் ஆகியவற்றிற்கு முதலிடம் வழங்கியுள்ளது.

கிறிஸ்த்தவம்- சர்வ வல்லமையுள்ள இறைவனின் அந்தஸ்த்திற்கு ‘தனது சுகாதாரத்தைப் பெறுவதற்கு இறைவனின் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்’ எனக் கூறுகிறது.

பௌத்தசமயம்- ‘நோயற்றிருத்தல் சிறந்த ஆதாயமாகும். மகிழ்ச்சி உன்னதமானதோர் செல்வமாகும்’ எனக் கூறுகிறது.


ஆக்கம் : கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

No comments:

Post a Comment