Monday, December 5, 2011

கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்

-கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed ,  (Email. mzshajahan@gmail.com)



அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள்  கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.

மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல விளைவுளை ஏற்படுத்துவதில்லை. கோபத்தை அடக்கத் தெரிந்தவனே உண்மையான  
     பலசாலியாவான் என்று கூறப்படுகிறது.


'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்
என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகளாகும்


கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக,உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.

·         நாம் சொல்வதை மற்றவர்கள்  மதிக்காத போது...
·         நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
·         நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
·         எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது
எங்களை யாராவது ஏமாற்றும் போது.

இப்படி பல காரணங்ளை குறிப்பிடலாம்.

உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம்.  அல்லது நம்மை நாமே  தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு  கோபமாகும் என்று குறிப்பிடப்படுகிறது.

கோபம் உங்களை அழித்து விடும்

மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான். மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி ஒத்தசை புரிந்து  வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்
.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை,  கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல்,தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

அடிக்கடி கோபப்படுபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

                                கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு இரசாயண மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.

                நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரணமடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.                அப்படியானால் ஆரோக்கியம் சிறப்பாக இல்லையென்றால் ? இந்த விழுக்காடு இருபத்து ஐந்து என ஏறுகிறதாம்.

                நல்ல திடகாத்திரம், ஒழுங்கான உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம் எல்லாம் இருந்தாலும் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லையெனில் ஆபத்து தான் என்பதையே இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

                கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதுவும் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் ஒரு காரணி என இதற்கான மருத்துவ விளக்கத்தை எளிமையாய் தெரிவிக்கிறார் ஆராய்ச்சியின் தலைவர் யோய்சி சிந்தா.

                இதைக் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி கோபம் எப்படி இதயத்திலுள்ள மின் அமைப்பைப் பாதிக்கிறது எனும் கோணத்தில் நடந்தது.

                அந்த ஆய்வின் முடிவு, கோபம் இதயத்தின் மின் நிலையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுகிறது என நீள்கிறது. இவை மாரடைப்புக்குக் காரணமாகி விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 40000 சடுதி மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

                பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டம், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் போன்றன இந்த நிலையற்ற மின் அதிர்வுச் சிக்கலை பல கோடி இதயங்களில் உருவாக்கி விடுகின்றன. இப்படி ஒரு சில தேசங்களை ஒட்டு மொத்தமாக ஒரு இறுக்கமான நிலைக்குள் தள்ளும் போது மாரடைப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவிக்கிறார் அமெரிக்க மருத்துவர் லாம்பெர்ட்.






கோபத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் சில

திருமணம் மற்றும் ஏனைய  தொடர்புகளை அழித்து விடும்.
தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.
கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக இது உயர்கிறது.
கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது  மாரடைப்பில் விட்டு விடும்.
இதயத் தசைகளில் வலிப்புஇ இதயத் துடிப்பில் பாதிப்புஇ உயர் ரத்த அழுத்தம்இ ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளாகும்.
மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.


கோபத்தை குறைக்க சில வழிகள்

·         கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
·         கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

·         அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
·         நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
·         செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
·         கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
·         நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
·         எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
·         சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

·         கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
·         முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.கோபத்தை குறைக்க
·         ஒரு கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.

·         இதே போல் மன அழுத்தம் இருந்தாலும் சிறிய சர்க்கரையை சாப்பிட்டால் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர்.அதிலும் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் நீண்ட நாள் சந்தோசமாகவுத் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டுமானால் நிச்சயம் நம் கோபத்தை குறைத்தே ஆக வேண்டும்.


          கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed ,  (Email. mzshajahan@gmail.com)       

No comments:

Post a Comment