கலாநெஞ்சன் ஷாஜஹான்
'பஞ்சிகாவத்த...மருதான....
டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின்
குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி
வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து
விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.
'ஹரி யன்ட' நடத்துனன் குரல் கொடுக்க பஸ்
புறப்படுகிறது.
எனது வலது கால் மிதிப்பலகையில் சிக்கித் தவிக்க, இடது கால் வெளியே
ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, அந்த தனியார் பஸ் வண்டியோ
வீதி மைதானத்தின் ஓட்டப் போட்டியில் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எதிரிக் குழுவின் மத்தியில் தனி ஒருவனாகப் புகுந்து
தாக்குதல் நடத்தும் தமிழ் திரைப்படக் கதாநாயகனாக நடத்துனன் அத்தனைப் பயணிகள்
மத்தியிலும் புகுந்து ஊடறுத்துச் செல்வது பயணிகளின் முனகல் சத்தத்திலிருந்து
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
'இறைவா! நரகத்து வேதனையை
மனிதன் உலகில் புரிந்து கொள்வதற்காகவா தனியார் பஸ்களை நரகத்தின் நடமாடும் கிளைகளாக
அமைத்து இருக்கிறாயா?' என்னை நான் தினம் தினம் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.
' தென் நெகபு கட்டிய சல்லி
தென்ன' (இப்போது ஏறியவர்கள் பணத்தை தாருங்கள்) நடத்துனனின் குரல் பஸ்ஸின் எங்கோ ஒரு
இடத்திலிருந்து மட்டும் தெளிவாகக் கேட்கிறது.
எனக்கு பாக்கட்டிலிருந்து டிக்கட்டுக்கான பணத்தை எககடி
எடுப்பது என்று தெரியவில்லை.ஒல்வொரு நாளும் பஸ்ஸுக்கு சில்லறையாக பணத்தை கொண்டு
வரும் நல்ல பழக்கம் எனக்கு உண்டு. இன்று எனது தர்ம பத்தினியோடு ஏற்பட்ட சில்லறைச்
சண்டையில் சில்லறை மாற்றிக் கொண்டு வருவதை மறந்து விட்டேன்.
' கருணா கரலா இஸ்ஸராட்ட யன்ன'( தயவு செய்து முன்னால்
செல்லுங்கள்) நடத்துனனின் நாகரிகம் கலந்த அதிகாரக் குரல் ஒலிக்கிறது.
'மீட்ட வெடிய இஸ்ஸராட்ட யனவனங்
இஜ்ஜரா கண்ணாடிய கடாகென தமய் யன்ட வென்னே' (இதற்கு மேல் முன்னால்
செல்வதென்றால் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்). இது
பஸ்ஸினுள் பாதி;க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனித ஜீவனின் தைரியமான பதில்.
' கெமத்திநங் இன்ட... நெத்தங்
பயின்ட' (விருப்பமென்றால் இருங்கள்.. இல்லையேல் இறங்குங்கள்)
இப்போது அந்த மனித ஜீவன் பதில் குரல் கொடுக்கவில்லை.
அடக்கப்பட்டுவிட்டது இன்றைய ஜனநாயகத்தைப் போல.
இப்போத நடத்துனனின் பூரண கட்டுப்பாட்டில் அந்த நடமாடும் நரக
வாகனம் கொழும்பு நகரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது.
'சல்லி துன்னெத்தி அய டிக்கட்
கன்ன' (பணம் கொடுக்காதவர்கள் டிக்கட் எடுங்கள்)
இப்போது நடத்துனனின் குரல் மிக அண்மையில் கேட்கிறது.
பணத்தை எப்படி எடுப்பது? நான் பாதி உள்ளேயும் மீதி
வெளியேயும் அல்லவா உயிருக்கு உத்தரவாதமில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது எனது உயிரே எனது வலது கையில்தான் இருக்கிறது. கையை
விட்டால் உயிரை விட வேண்டியதுதான். இடது கையில் ஆபிஸ் பை. வலது கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வலியின்
மத்தியிலும் பிடியை தளரவிடாமல் உடும்புப் பிடியாய் தடியை இருகப் பிடித்துக்
கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால், நான் ஆபிஸ் போய் சேரமாட்டேன்.
எனது உடல்தான் ஆஸ்பத்திரிக்கு போய் சேரும்.
'மாத்தயா டிக்கட் கத்தத' (சேர் டிக்கட் எடுத்தீர்களா?) என்னிடம் நடத்துனன் தொட்டுக்
கேட்பது புரிகிறது. எங்;கே அவன்? கை மட்டும் என் முகத்திற்கு நேராக பிச்சைப் பாத்திரமாய் தெரிகிறது.
'மல்லி பஸ் நவத்துனாம தென்னங்;” (தம்பி பஸ்ஸை நிறுத்தியவுடன்
தருகிறேன்) இது நான்.
ஹரி.... ஹரி....
ஆமத்தக்க நெத்துவ தென்ன' (சரி.... சரி...மறந்துவிடாமல் தாருங்கள்)
பயணிகள் டிக்கட்டை மறந்தாலும், நடத்துனன் பயணிகளை மறப்பானா? முடிந்தால் ஒரு தடைவைக்கு
இரண்டு தடைவையாவது டிக்கட் எடுக்க வைக்கும் வல்லமை பெற்றவர்கள் அல்லவா அவர்கள்.
பஸ்ஸில் ஏறும் போது நெருங்கிய உறவினர்கள் போல் அன்பாக
வரவேற்பார்கள். பின்பு இறங்கும் வரையிலும் பரம விரோதிகள் போல் அல்லவா பல
நடத்துனர்கள் நடந்து கொள்கிறார்கள்.
“ஹோல்ட் எகே நவத்தன்ட' (பஸ் நிலையத்தில்
நிறுத்துங்கள்).பயணிகள் சிலருக்கு விடுதலை வழங்கும் விடுதலை குரல்
நடத்துனனிடமிருந்து வருகிறது.
பஸ் பஞ்சிகாவத்தை தரிப்பிடத்தில் நிற்கிறது.
பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்த பரிதாபத்துக்குரிய இன்னும்
சில பயணிகளன் தேனை ஈ மொய்ப்பது போல பஸ்ஸை சூழ்ந்து கொள்கிறார்கள். ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல்
நான் முந்தி நீ முந்தி என எல்லோரும் ஒரே வேளையில் ஏறமுற்படுவது இறங்குகின்ற
பயணிகளுக்கு இடையூறாக இருக்கிறது.
நரகத்து வேதனையின் விளிம்புக்கு வந்து தமக்கு சுதந்திரம்
கிடைத்த திருப்பதியில் சந்தோசத்தோடு இறங்கும் பயணிகளுக்கு இவர்களின் அவசரம்
மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதைப் போன்றதுதான் என நினைத்துக்
கொள்கிறேன்.
நடத்துனன் ஏற முற்படுபவர்களை தடுத்து நிறுத்தி
இறங்குபவர்களுக்கு வழிவிடச் செய்கிறான். நான் கீNழு இறங்கி விடுதலையாகிப்
போகும் பயணிகள் ஒவ்வொருவரையும் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
'தென் நகின்ட' (இப்போது ஏறுங்கள்).நடத்துனன்
அனுமதி அளிக்க, நான் ஒரே துள்ளலாக பஸ்ஸிற்குள் ஏறிக் கொள்கிறேன்.
இருப்பதற்கு இடம் கிடைகக்குமா உன எதிர்பார்த்த எனக்கு
ஏமாற்றம்தான் கிடைத்தது. நாற்பது பேர் வரை அமர்ந்து போகக் கூடிய அந்த பஸ்ஸில்
பதினைந்து பேர் வரை இறங்கியும், பஸ்ஸினுள் இன்னும் பலர்
நின்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
நானும் நிற்பவர்களின் ஒருவராக அவர்களோடு ஒட்டிக் கொள்கிறேன்.
இல்லை நடத்துனனால் ஒட்ட வைக்கப்படுகிறேன்.
கீழே நிற்கும் அனைவரையுமே ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று
கங்கனம் கட்டியவனாக நடத்துனன் தனது திறமையை அங்கே நிரூபித்துக் கொண்டிருக்க , எனக்கோ மூச்சு
எடுக்கக்கூட முடியாத நிலை. ஏன் கால்களை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஏன்னருகே நிற்;கும் நவ நாகரிக நங்கையொருத்தி
நளினமாக என்னைப் பார்த்து சிரிக்கிறாள். பஸ்ஸில் தினமும் காணும் முகம் என்பதால்
நானும் பதிலுக்காக சிரித்து வைக்கிறேன். அவளிடமிருந்து வீசும் விலையுயர்ந்த 'பேர்பியும்' (Pநசகரஅந) வாசணை என் மூக்கை
துளைத்து என்னை எங்கோ கொண்டு செல்கிறது.
இவள் தினமும் ஆபிஸுக்கு போகிறாளா? இல்லை அழக்கு ராணி
போட்டிக்குப் போகிறாளா?- இது நான் சில பெண்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி.
பஸ் புறப்படுகிறது. அந்த அழகுப் பதுமையின் மாங்கனிக் கன்னம்
பஸ்ஸின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு என் கன்னத்தோடு ஒட்டி உறவாடிக் கொள்கிறது. நான்
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடைப்பட்ட நிலையில் நிற்க, அவள் எவ்வித சலனமுமில்லாமல்
வெளியே வேடிகக்கை பார்த்தபடி இருக்கிறாள்.
தனியார் பஸ்ஸில் தினமும் பயணம் செய்யம் சில பெண்களுக்கு
பெண்களுக்கே உரித்தான நாற்குணங்களும் தேய்ந்து கொண்டு வருவதாக எனது நண்பன் ஒருவன்
சொன்னது இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
அவர்களை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது . சில
முதுகெலும்பற்ற ஆண்களும் பஸ்ஸில் பெண்களுக்கு
தொந்தரவு கொடுத்தபடி பிரயாணம் செய்கிறார்கள். குறிப்பாக வயோதிப இளைஞர்கள்
சிலர் ஐம்பதிலும் ஆசைவரும் என்பது போல் கூட்டத்தில் சுகம் காண பஸ் பயணத்தை நன்கு
பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திடீரென பஸ்ஸினுள் ஒரு குரல்.
'அடோ மகே பேர்ஸ் எக்க பொக்கட்
கெவ்வ நேத? ' (அடேய்! என்னுடைய 'மணிபர்ஸை' பாக்கட் அடித்தாய் தானே?)
எனது பின்னால் ஏதோ
அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
' மம கத்த நே' (நான் எடுக்கவில்லை)
இது இன்னொரு குரல்.
ஆம் பஸ்ஸில்
முடிச்சுமாறி ஒருவன் தனது கை வரிசையை காட்டியிருக்கிறான்.
நான் மிகவும் கஸ்டப்பட்டு வலது கையை எனது பின் பக்கத்திற்கு
கொண்டு சென்று தொட்டுப்; பார்க்கிறேன்.
அந்த தனியார் பஸ்ஸின் மேல் மருதானை பாலம் அப்படியே உடைந்து
விழுந்தது போன்ற அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. ஆம். எனது பர்ஸும் முடிச்சுமாறியின்
கை வரிசைக்கு ஆளாகியிருக்கிறது.
' பஸ் எக்க நவத்தன்ட' (பஸ்ஸை நிறுத்துங்கள்).நான்
என்னையும் அறியாமல் எழுப்பிய அலறல் அது. பஸ் மருதானை பொலிஸ் நிலையம் முன்பாக
நிறுத்தப்படுகிறது.
அந்த நாகரிக நங்கை என்னை அதிசயமாகப் பார்க்கிறாள். எனக்கு
அவள் மேல் கோபம் கோபமாக வருகிறது. சில வேளை இவளும் முடிச்சுமாறியாக இருப்பாளோ?
சென்ற வாரம் கூட பத்திரிகை ஒன்றில் நாகரிக உடையில்
பெண்களும் முடிச்சுமாறிகளாக நடமாடுவதாக செய்தி ஒன்றை படித்த ஞாபகம் எனக்கு.
இருக்காது . இவளைத்தான் தினமும் நான் சந்திக்கிறேனே. முனம் சமாதானம் சொல்கிறது.
பணத்தை பறிகொடுத்த நடுத்தர வயது பயணி அந்த முடிச்சுமாறி
ஓடிவிடாமல் இருக்க, அவனை கெட்டியாகப் பிடித்தபடி
கீழே இறங்குகிறான்.
நானும் ஆத்திரத்தோடு முடிச்சுமாறியை பார்க்கிறேன்.பறுப்பு
நிற காற்சட்டையும், வெள்ளை சேர்ட்டும் சப்பாத்தும் அணிந்து வாட்ட சாட்டமாகக் காணப்படும் இந்த
இளைஞனா முடிச்சுமாறி? .யாரும் எளிதில் நம்பமாட்டார்கள்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நடத்துனனிடம்
விசாரிக்கின்றனர். பணத்தை பறிகொடுத்த அந்த மனிதரும் நானும் அழாத குறையாக நடந்ததை
சொல்கிறோம்.
'ஒங்களன் துன்தெனாம இன்ட.அனித்
கட்டிய யன்ன' (நீங்கள் மூன்று பேரும் இருங்கள்.மற்றவர்கள் போங்கள்). பொலிஸ்
உத்தியோகத்தர்களில் ஒருவர் இவ்வாறு கூற மற்ற பொலிஸ் உத்தியோகத்தர் பஸ்ஸின் இலக்கத்தை
குறித்துக் கொள்கிறார்.பஸ் புறப்படுகிறது.
மூவரும் பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்துச்
செல்லப்படுகிறோம். என் வாழ்க்கையில் முதல் தடைவையாக பொலிஸ் நிலையத்திற்குள் காலடி
எடுத்து வைக்கிறேன்.
நான் பணத்தையும் பறிகொடுத்து விட்டு 'பாக்கட் ' அடித்து அகப்பட்டது போன்ற பய
உணர்வுடன் உள்ளே செல்கிறேன். அந்த முடிச்சுமாறி இளைஞனோ என்னை மட்டும் அடிக்கடி
முறைத்துப் பார்த்தபடி வருகிறான்.
என் மனைவியின் கழுகுக் கண்களுக்கு அகப்படாத வகையில் மறைத்து
வைத்திருந்த ஆயிரம் ரூபா நோட்;டு இரண்டோடு, ஐநூறு ரூபாய் ஒன்றும் நூறு ரூபாய் இரண்டும், பத்து ரூபாய் சில்லறைகளுமாக
சில்லறைகளுமாக இரண்டாயிரத்து எழு நூறு ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை
பறிகொடுத்திருப்பதை நினைத்த போது எனக்கு அந்த இளைஞனை பிடித்து உதை, உதை என உதைக்க
வேண்டும் போல இருந்தது.
ஐயோ! மணிபர்ஸினுள் எனது அடையாள அட்டையும் அல்லவா
இருக்கிறது.நல்ல வேளை திருடன் பிடிபட்டான்.இல்லாவிட்டால் நடமாடுவதெப்படி? இறைவா! ஊனக்கு கோடி நன்றிகள்
உரித்தாகட்டும் என மனதால்; இறைவனுக்கு நன்றி கூறுகிறேன.;
'மெதன ஒங்களங் தென்னம
வாடிவென்ன' (இங்கே நீங்கள் இரண்டு பேரும் அமருங்கள்)
இருவரும் அங்கு போடப்பட்டிருந்த வாங்கொன்றில் அமர்ந்து
கொள்கிறோம்.
அந்த இளைஞனோ ஒன்றும் தெரியாத அப்பாவி போல அமைதியாக நின்று
கொண்டிருக்கிறான். எனது மனமோ அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது.
' உம்ப எத்த கியபங். மேகொலன்
தென்னகே பேர்ஸ் எக்க உம்ப கத்த நேத' (நீ உண்மையை சொல்.இவர்கள்
இரண்டு பேரினதும் பேர்ஸை நீ எடுத்தாய் தானே?)
'நே சேர்' (இல்லை சேர்)
பளார்! இளைஞனின் கன்னத்தில அடி விழுந்தது.
'நே சேர்! மம கத்தே நே. மம
ரஸ்ஸாவட்ட யனவா. மேகொலங்கே சல்லி மட்ட அவஸ்ய நே.' ( இல்லை சேர். நான் எடுக்கவில்லை.
நான் தொழிலுக்கு போகிறேன்.இவர்களுடைய பணம் எனக்கு தேவையி;ல்லை.)
அந்த போலிஸ் உத்தியோகத்தர் தனது இடுப்புப் பட்டியை உருவி
எடுக்கிறார்.
அந்த இளைஞனுக்கு தாறுமாறாக அடி விழுகிறது.அவன் அடியின்
வேதனை தாங்க முடியாமல் 'மாத்தயா! கான்ட எப்பா. மம எத்த கியன்னங். மம எக்கனாகே பேர்ஸ் எக்க விதறய்
கத்தே. அனித் தெக்கனாகே கத்த நே.' (சேர்.அடிக்க வேண்டாம்.நான்
உண்மையை சொல்கிறேன். நூன் ஒருவருடைய பர்ஸை தான் எடுத்தேன். மற்றையவருடையதை
எடுக்கவில்லை.
அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பது
உண்மைதான்.
'ஏனங். பேர்ஸ் எக்க கனிங்' (அப்படி என்றால்பர்ஸை எடு
பார்ப்போம்)
இளைஞன் தனது நீள் காற்சட்டையின் வலது காலை உயர்த்துகிறான்
வலது கால் பாதணியினுள் சொருகியிருந்த மணிபர்ஸ் தனது தலையை வெளியே போட்டபடி
இருக்கிறது பர்ஸை எடுத்து நீட்டுகிறான்.
எனக்கு பகீரென்று இருந்தது. நிச்சயமாக அது எனது பர்ஸ் அல்ல.
' சேர். மேக்க தமய் மகே பேர்ஸ்
(சேர் இதுதான் என்னுடைய பர்ஸ்) என்று எனது பக்கத்திலிருந்தவர் போன உயிர் மீண்டவராக
கூறுகிறார்.
பொலிஸ் உத்தியோகத்தர் 'ஒயாகே சல்லி அரித கியல பலன்ட' (உங்கள் பணம் சரியாக
இருக்கிறதா என்று பாருங்கள்) என்றவாறு பர்ஸை நீட்டுகிறார். சந்தோசத்தோடு அந்த
மனிதர் அதனை பெற்றுக் கொள்கிறார்.
'ஏனங் மெயாகே பர்ஸ் எக்க உம்ப
கத்தே நெத்த?' (அப்படி என்றால் இவருடைய பர்ஸை நீ எடுககவில்லையா?) பொலிஸ்காரர் அதட்டிக்
கேட்கிறார்.
'மகே அம்ம பா நே சேர்' (எனது தாய் மேல் சத்தியம.; நான் எடுக்கவில்லை சேர்)
இளைஞன் தனது இடது காலணியையும் காட்டிவிட்டு காற்சட்டை
பாக்கெட்டையும் பார்க்கும்படி கூறுகிறான்
மற்ற பொலிஸ்காரர் அவனை அங்குலம்; அங்குலமாக சோதித்துப்
பார்த்துவிட்டு அவனது சேர்ட் பாக்கட்டிலிருந்து முகச்சவர 'பிளேட' ஒன்றை ஒன்றையும், கொஞ்சம்
சில்லறை காசையும் எடுக்கிறார்.
இளைஞனுக்கு மீண்டும் அடி விழுகிறது. அவனது முகத்திலிருந்து
சிறிது இரத்தம் கசிகிறது. எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது.
அப்படியானால் எனது பர்ஸை எடுத்தது யார்? அந்த நாகரிக நங்கை எனது
மணக்கண் முன் அடிக்கn வந்து போகிறாள்.சீ...இருக்காது.எனக்கு நானே பதில் சொல்லிக் கொள்கிறேன்.
மீண்டும் இளைஞனின் கன்னத்தில் அடி விழுகிறது.இப்போது அவன்
அலறவில்லை. ஏன்னை முறைத்துப் பார்க்கிறான்.
தவறாக இவனை காட்டிவிட்டோமா?
'மெயாவ கூடுவட்ட தாண்ட' (இவனை கூண்டில் அடையுங்கள்)
என்று அடிகொடுத்த பொலிஸ்காரர் கூற மற்றவர் இளைஞனை இழுத்துக் கொண்டு போய் கூண்டில்
அடைக்கிறார்.;
இளைஞன் அங்கிருநதபடி என்னையே முறைத்துப் பார்த்துக்
கொண்டிருக்கிறான்.எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது.
இவன் எடுக்காமல் வேறு யாராவது எடுத்திருந்தால்அ இன்னொரு நாள் இவன்
என்னை பழிவாங்கலாம் அல்லவா? அவன் எடுத்திருந்தால் என்னை மாத்திரம் ஏன் முறைத்துப் பார்க்க வேண்டும்? பறிகொடுத்த மற்றையவரையும்
அப்படிப் பார்த்திருக்க வேண்டும் அல்லவா?
'சேர் இப்ப நீங்கள் முறைப்பாடு
ஒன்றை கொடுத்துவிட்டு போங்கள். எப்படியாவது உங்களது பரஸை எடுத்துத்த
தருகிறோம்.இவன் எடுத்து வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்' என்று அந்த பொலிஸ்காரர்
என்னிடம் கூறுகிறார்.
ஓ. அப்படி ஒரு கூட்டமைப்பு இருக்கிறதா? முடிச்சுமாறிகளுக்கும் ஒரு
கூட்டுறவா? நான் உலகத்தை நிறைய படிக்க வேண்டி இருப்பது எனக்கு இப்போது புரிகிறது.
முறைப்பாடு செய்வது தவிர வேறு வழியில்லை. எனது முறைப்பாடு
முதல் தடைவையாக பொலிஸ் புத்தகத்தில் பதியப்படுகிறது.
இருவரும் பொலிஸாருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வருகிறோம்.
இன்று ஆபிஸுக்கு லீவு போட வேண்டியதுதான்.ஐந்து பத்து
நிமிடம் தாமதமாகப் போனாலே முகத்தை கடு கடுவென வைத்துக் கொள்ளும் எனது மேலதிகாரி, இரண்டு மணித்தியாலம்
தாமதமாகிப் போனால் என்ன சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும். பேசாமல் லீவு போட்டு
விட வேண்டியதுதான்.
இப்போது எபபடி வீட்டுக்கு போவது? கையில் பணமில்லை. ஆதை
புரிந்து கொண்ட அந்த நபர் எனது கையில் நூறு ரூபாயை திணிக்கிறார். எனது உடல்
புல்லரிக்கிறது.
இனத்துவேசத்தை பரப்பிக் கொண்டிருக்கும் சில பேரினவாதிகள்
மத்தியில் நல்ல உள்ளங்களும் இருக்கத்தானே செய்கின்றன.
நான் அந்த மனிதருக்கு நன்றி கூறிவிட்டு வீடடுக்கு
செல்வதற்காக பஸ்ஸி ஏறிக் கொள்கிறேன். இப்பொது எனக்கு பயம் இல்லை . காரணம் மடியில்
கனம் இல்லை அல்லவா?
சோர்வாக வந்து வீடு வந்து சேர்கிறேன். மனைவி என்னை
புதினமாகப் பார்த்தாள்.
என்ன வேலைக்கு போகாம திரும்பிட்டீங்க. உடம்புக்கு
சுகமில்லையா? என ஆதரவாகக் கேட்டாள்.
போகும் போது சின்னச், சின்ன கோபத்தோடு சண்டைப்
பிடித்தாலும், வரும் போது சின்னச் சின்ன அன்பு வார்த்தைகளை வீசி வரவேற்பதில் எனது மனைவி
கெட்டிக்காரி.
நடந்த விடயத்தை அவளிடம் கூறுகிறேன். அந்த நாகரிக நங்கையைப்
பற்றி வாய் திறக்கவில்லை. சொன்னால் சின்னச் சின்ன சண்டைகளுக்கு பதிலாக பெரிய, பெரிய
யுத்தம் வெடிக்கலாம்.
எனது சோகக் கதையை அவதானமாகக் கேட்டுக் கொண்டு வந்தவள் 'கொஞ்சம் பொறுங்க' என்றவாறு படுக்கை அறைக்கு
சென்று மறைகிறாள்.
எனக்கு ஒன்றும் புரியவி;ல்லை. மறைந்தவள் மீண்டும்
தோன்றுகிறாள். அவளது கையில் எனது மணிபர்ஸ்.
எனது விழிகள் ஆச்சரியத்தால் அகல விரிகின்றன.
' இது எப்படி இங்கே வந்தது?
'காலையில் எனனோடு கோபித்துக்
கொண்டு வேலைக்கு போற அவசரத்துல பர்ஸ எடுக்காம போயிருக்கீங்க'
அட பாவமே! ஆப்பொ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது, அந்த
நாகரிக நங்கையை சந்தேகித்தது?
எனக்கு தலை சுற்றுகிறது
என் இல்லத்தரசி வாய்விட்டுச் சிரிக்கிறாள்.
நான் மீண்டும் பொலிஸ் நிலையம் புறப்படுகிறேன்.
(யாவும் கற்பனையே)
(இக்கதை "தமிழ்த்தந்தி" பத்திரிகையில் -19-5-2013 அன்று பிரசுரமானது)
No comments:
Post a Comment