Sunday, September 29, 2013

வயம்ப தேர்தல் களம் ஒரு பார்வை

 
எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed                            


எல்லோரும் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்த வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும்
பெற்றுள்ளது.
வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் நடைபெற்றது.
தேர்தல் பணிகளுக்காக சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டனர். 5000 பேர் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய அமைய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் பார்வையாளர்களும் இந்த தேர்தல்களை கண்காணிப்பதற்கும் அவதானிப்பதற்கும் வருகை தந்தமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில், இந்த வடமேல் மாகாணத்தில் தேர்தல் இடம் பெற்ற அன்று சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இவை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை  ஏற்படுத்துவனவாக அமையவில்லை.
புத்தளம் மாவட்டத்தற்கு 16 உறுப்பினர்களும், குருணாகல் மாவட்டத்திற்கு 34 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவதற்காக வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த 50 உறுப்பினர்களையும்  தேர்ந்தெடுப்பதற்காக 17 இலட்சத்து 54ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் குருணாகல் மாவட்டத்திலிருந்து 122781 வாக்காளர்களும்;, புத்தளம் மாவட்டத்திலிருந்து 526408 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த மாகாணங்களில் இம் முறை 25 அரசியல் கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் போட்டியிட்டன. வேட்பாளர்களின் எண்ணிக்கை 1362 ஆகும். இவர்களில் புத்தளம் மாவட்டத்திலிருந்து 437 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 925 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் குதித்தனர். 1309 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற்றதுடன் 197 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் முழுமையான ஆதிக்கத்தில் இருக்கின்ற இந்த மாகாண சபையில், சுமார் மூன்றரை இலட்சம் மக்கள் சிறுபான்மையினராவர். சிறுபான்மை சமூகத்தால் ஓரிரு உறுப்பினர்களையே கடந்த கால தேர்தல்களில் வென்றெடுக்க முடிந்திருக்கிறது என்பதும், இந்த இரண்டு மாவட்டங்களிலும் சிறுபான்மை சமூகத்துக்கு தாராளமாக வாக்குப்பலம் இருந்தும் மாகாண சபையில் போதுமான பிரதிநிதித்துவம் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாண சபையைப் போல வடக்கு கிழக்குக்கு வெளியே சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கணிசமான அளவு செறிந்து வாழும் வடமேல் மாகாண சபையிலும் இம்முறை தேர்தல் பரபரப்பு அடைந்திருந்தது.

நடைபெற்ற மூன்று மாகாண சபை தேர்தல்கிளிலும்; வடமேல் மாகாணத்திலேயே தேர்தல் பிரசாரத்திற்காகவும் அதனோடிணைந்த பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும் பல இலட்சக்கணக்கான ரூபாய் பணம் வாரி இறைக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்களும் தாராளமாக இடம்பெற்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்;சி       என்பன வட மேல் மாகாணத்தில் போட்டியிட்ட பிரதான கட்சிகளாகும்.
.
ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு அருகி வரும் குருநாகல் மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது பதவி இராஜினாமா செய்துவிட்டு வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் குருணாகல் மாவட்டத்தின்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் பலரையும் ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றார்.
 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்வுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்தே அவர் அக்கட்சியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது. கட்சித் தாவிய தயாசிறி வடமேல் மாகாண சபையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தான் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறியிருந்தார். அது போலவே அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்று அதனை அவர் நிரூபித்தார்.
அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 40 ஆயிரத்து 185 வாக்குகள் பெற்றுள்ளன. இது அந்த தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 84.43 வீதமாகும். இந்த தேர்தல் தொகுதியில் ஐக்திய தேசியக்கட்சி 4667 வாக்குகளையே பெற்றது.
தேர்தல் களத்தில் மிக சூட்சுமமாக காய் நகர்த்தும் ஆளும் கட்சி, குருநாகல் மாவட்டத்தில் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என கருதி தயாசிறியை தம் பக்கம் இழுத்துக் கொண்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிப் பாதைக்கு துரும்பாகவிருந்த குருநாகல் மாவட்ட மக்கள், மாற்றமில்லாத தமது அரசியல் நிலை கண்டு சோர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. தயாசிறி ஜயசேகரவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்த மாவட்டத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்துவின் மகன் யொஹான் பெர்னாந்துவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டமையும், ஒரே கட்சியை சேர்ந்த இரு தரப்பினருக்குமிடையில் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக கடும் போட்டி நிலவியமையம் பகிரங்கமாகும்.

தேர்தல் சட்த்திட்டங்களை மீறும் சம்பவங்களும் வன்முறைகளும்
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கடந்த புதன் கிழமை நிறைவடைந்த பின்னரும் தேர்தல் நடைபெற்ற அன்று வரை மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வேட்பாளர்கள் சிலர் குறுந்தகவல் மூலம் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவருகின்றது.
இதன்படி வேட்பாளர்களின் கட்சி, பெயர், விருப்பு இலக்கம் போன்றவற்றை குறுந்தகவல்கள் வாக்களர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்ககும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்குமிடையில் கைலப்பு இடம்பெற்றுள்ளது. அதேபோன்று  தேர்தல் தினத்தன்று காலை வென்னப்புவ பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரின்  வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற்ற தினத்தன்று 106 முறைபாடுகள் தமக்குப் பதிவாகியிருப்பதாகவும் அவற்றில் வடமேல் மாகாணத்தில் 32 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
கிடைக்கப் பெற்ற 106 முறைபாடுகளில் முக்கிய சம்பவங்களாக குறிப்பிடக்கூடிய சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷேட சம்பவங்கள்
தேர்தல் தினத்தன்று வாக்காளர் அட்டைகளை கிழித்து வீசி தேர்தலை புறக்கணித்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றது.
புத்தளம், ஆனமடுவ பால்கம மற்றும் கவவேலந்த ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களே தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கிழித்தெறிந்து வாக்களிப்பை புறக்கணித்தனர்.
இந்த இரு கிராமங்களையும் சேர்ந்தவர்களுக்கு பலவருடங்களாக பாலகம சனசமூக நிலையத்தில் அமைக்க்ப்பட்டு வந்த வாக்குச்சாவடி, இம்முறை அந்த கிராமங்களிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஆனமடுவ சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கிராமவாசிகள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.
அந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 600 வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வாக்காளர் அட்டைகளை கிழித்தெரிந்து தேர்தலை புறக்கணிக்கையில், அடையாள அட்டையின்றி தேர்தல் நிலையத்திற்கு வாக்களிக்கச் சென்ற அமைச்சர் ஒருவர் அதிகாரிகளால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று வடமேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது
வடமேல் மாகாண சபைக்காக சிலாபம் மாவட்டத்தில் கட்டுநேரிய சென்.செபஸ்டியன் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற அமைச்சர் தயாசித்த திசேராவே அங்கு கடமையிலிருந்த அதிகாரிகள் வாக்களிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவராவார்.
தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாமையையே வாக்களிப்பதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணமாகும். அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பிய அமைச்சர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

வடமேல் மாகாண சபை தேர்தல் முடிவு ஓரு அலசல்

வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 66.43 சத வீத வாக்குகளைப் பெற்று 34 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது. 24.2 சத வீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன. முதன் முதலாக தேர்தலில் குதித்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காவின் தலைமையிலான ஜனநாயக கட்சி 46114 வாக்குகளைப் பெற்று (4.34 வீதம்) மூன்று ஆசனங்களை கைப்பற்றி வடமேல் மாகாண சபையில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது. ஜே.வி.பியிற்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதாக கூறப்பட்டாலும் உண்மையில் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களை இழந்திருக்கிறது என்பதே உண்மையாகும். முன்னர் அதன் வசமிருந்த 37 ஆசனங்கள் தற்போது 34 ஆக குறைந்துள்ளன. அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டு ஆசனங்களை பறிகொடுத்துள்ளன. 14 ஆசனங்களாக இருந்த அந்தக் கட்சியின் ஆசனங்கள் இம்முறை 12 ஆக குறைந்துள்ளன. இரு பிரதான கட்சிகளும் மொத்தமாக தமது ஐந்து ஆசனங்களை இழக்க புதிதாக வந்த ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது. ஆதன் காரணமாக மூன்றாவது சக்தியாக மாறியிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 668743 வாக்குளை பெற்றது. அது 69.43 சதவீதமாகும். ஆயினும் இம்முறை அது ஆசனங்கள் மூன்றை  இழந்நிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி 2009 இல் 270347 வாக்குகளை பெற்றது. அது 28.08 சதவீதமாகும். அக்கட்சியின் வாக்குகளும் இம்முறை குறைந்துள்ளதுடன், வாக்கு வீதமும் குறைந்துள்ளது.
ஜே.வி.பி 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 20428 வாக்குகளை பெற்றது . அது 2.12 சத வீதமாகும். இம் முறை அக்கட்சி 19624 வாக்குகளையே (1.85) பெற்றுள்ளது. அதன் வாக்கு வங்கியும் குறைந்துள்ளது. ஆயினும் அக்கட்சி தனது ஒரு ஆசனத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜே.வி.பி மக்களுக்காக பல்வேறு வகைகளிலும் குரல் கொடுத்து வந்தாலும், நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அதன் செல்வாக்கு குறைந்துள்ளமையையும் ஆதரவு அதிகரிக்காமையையும் இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயக கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா தேர்தல் பிரசாரத்திற்காக வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தமையும்;,தேர்தல் பிரசாரத்திற்கான கடுமையாக உழைத்தமையும் மாத்திரம் அவரது கட்சியின் வெற்றிக்கான காரணம் அல்ல. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாகவும், ஆட்சியாளர்களின் ஊழல்கள், வீண் விரயங்கள் தொடர்பாகவும் அவர் தேர்தல் பிரசாரங்களில் எடுத்துரைத்து வந்தார். நாட்டுக்கு புதிய தலைமைத்துவத்தின் அவசியத்தையும்; ஆட்சி மாற்றத்தையும் அவர் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அத்துடன்  இரு பிரதான கட்சிகள் மீதும் அவர் சாடி வந்தார். இந்நிலையில் அவருக்கும் அவரது கட்சிக்கும் ஆதரவு அதிகரித்துள்ளமையையே இந்த மாகாண சபை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சரத்பொன்சேகாவின் கட்சி; எதிர்காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மேலும் பல வெற்றிகளை அடைய வாய்ப்பு உள்ளதையே இந்த தேர்தல் கட்டியம் கூறியுள்ளது.
இந்நிலையில், வட மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் உள்ள தேர்தல் தொகுதிகளில் 37 சத வீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. ஆணமடுவ (21.87)  ஹிரியால (21.36) , பண்டுவஸ்நுவர (9.81), நிக்கவரெட்டிய (17.34), யாப்பஹுவ (21.35), வாரிய பொல (20.9), கட்டுகம்பொல (21.74) ஆகிய தேர்தல் தொகுதிகள் அவற்றுக்கு சில உதாரணங்களாகும். தபால் மூல வாக்களிப்பில் புத்தளம் மாவட்டத்தில் 20.34 சத வீதமும் , குருணாகல் மாவட்டத்தில் 16.09 வீத வாக்குளையுமே ஜக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளில் இந்த தேர்தலும் புதிதாக சேர்க்கப்பட்டு வரலாறாகப் போகிறது என்பது மட்டும் உண்மையாகும்.
தபால் மூல வாக்களிப்பில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 69.56 வீத வாக்குளையும், குருணாகல் மாவட்டத்தில் 72-91 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அக்கட்சி இந்த மாகாணத்தில் பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் 60 முதல் 70 சத வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது.
வட மேல் மாகாண சபை தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட 17 இலட்சத்து 54ஆயிரத்து 218 மொத்த வாக்காளர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46 ஆயிரத்து 114 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 4.34 வீதமாகும். ஆத்துடன் அக்கட்சி ஆசனங்கள் இரண்டை பெற்றுக் கொண்டுள்ளது. புதிததாக வந்த ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களை பெற்றிருக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆசனங்களை அதிகரித்துக் கொள்ள முடியாமலிருப்பது கவனத்திற்கு உரியது.
இம்முறை மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு பெரியளவில் தமது ஆதரவை வழங்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக அண்மை காலங்களில் இடம்பெற்று வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்  முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின் மேலும் காங்கிரஸின் மேலும் உள்ள வெறுப்பும் .அக்கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதும் இதற்கான பிரதான காரணமெனலாம். உறுதியான தலைமைத்துவம் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் உள்ள அதிருப்தியும் முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டாமைக்கு காரணமாகும்.
சிறுபான்மை மக்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டாமையினால் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் இல்லாமற் போயின. அதுபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களான பெரும்பான்மையின சிறுபான்மையின மக்களும் கட்சித் தலைமைத்துவத்தின் மேல் உள்ள வெறுப்பினாலும் கட்சியின் மந்;தமான செயற்பாடுகளினாலும் தொடர்சியான தேர்தல் தோல்வியினால் ஏற்பட்ட அதிருப்பதியினால் வாக்களிக்காமல் இருந்தனர்.
இதேவேளை, ஜனநாயக கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட 18ஆயிரத்து 254 அதிகப்படியான வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணியைவிட 26ஆயிரத்து 490 அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இராணுவ தளபதியின் ஜனநாயக் கட்சி தேசிய அரசியலிலும் மூன்றாவது சக்தியாக உருவெடுக்குமா? ஜக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தேர்தல் முடிவுகள் தொடர்பாக என்ன சமாதானம் சொல்லப்  போகின்றன? கட்சியின்; பின்னடைவுகளை சரி செய்ய என்ன செய்யப் போகின்றன? இந்தக் கேள்விகள் அந்தக் கட்சிகளின் முன்னுள்ள பிரச்சினையாகும்.
பலம் வாய்ந்த எதிர்கட்சி ஒன்று எப்போது உருவாகும்?. இது நாட்டு மக்கள் கேட்கும் வினாவாகும். 


நன்றி – ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகை 29-9-2013

No comments:

Post a Comment