இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை
செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை
விசாரணைக்குழுவை நியமித்துள்ளமையைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும்
பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரச தரப்பிலிருந்து வழமை போன்று எதிர்ப்பான கருத்துக்கள்
வெளியிடப்படுகின்ற போதிலும் சர்வதேச நாடுகள் சிலவும் மற்றும் எதிர்கட்சிகளும்; சர்வதேச விசாரணைக்கு
ஒத்துழைப்பு வழங்குமாறு கூறிவருகின்றன.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய ஒத்துழைக்குமாறு
இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்
பிள்ளை கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார். ஐ.நா மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் 26வது அமர்வில்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
யுத்ததால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், இலங்கை அரசாங்கம் யுத்த
நிறைவின் 5வது ஆண்டை கடந்தமாதம்
கொண்டாடியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு. இலங்கையில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய தமது அலுவலகத்தால்,
நிபுணர்கள் அடங்கிய
விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் இது தொடர்பில்
பூரண விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும்
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஆயினும், ஜக்கிய நாடுகள் மனித
உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு
ஒத்துழைப்பு வழங்க போவதில்லையென இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வின் போது, மனித உரிமை ஆணையாளர் நவி
பிள்ளை,
ஆற்றிய உரையினை
அடுத்து இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க இதனை
தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக
அழிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ரீதியில் இந்த
அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் அங்கு உரையாற்றுகையில்
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இந்த
பதிலை எல்லோரையும் போன்று நவநீதம்
பிள்ளையும் எதிர்பார்த்;திருப்பார் என்பது நிச்சயம்;.
இந்நிலையில், சர்வதேச விசாரணைக் குழுவை
இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள்
அனுமதிப்பதா? இவல்லயா? என்பதை பாராளுமன்றமே
தீர்மானிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியும் இது
தொடர்பாக நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவையினால் நியமிக்கப்பட்டள்ள விசாரணைக் குழுவுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டும்
என்றும் விசாரணையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவும்
பிரிட்டனும் 26 ஆவது கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் விசாரணை செயற்பாட்டுடன் ஒத்துழைப்பவர்கள் எந்தவிதமான
அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் இன்றி செயற்படுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் இந்த இரு
நாடுகளினதும் பிரதிநிதிகள் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற வற்புறுத்தல்கள் அல்லது வேண்டுகோள்கள் இனிவரும் காலங்களில் பல்வேறு
நாடுகளிலிருந்தும் சர்வதேச அமைப்புக்களில் இருந்தும் வருவது நிச்சயமாகும்.
இதேவேளை,
சர்வதேச விசாரணைக்கு
அரசாங்கம் முகம் கொடுக்காவிட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரி;க்கை விடுத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து நாட்டின்
கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் அக்கட்சி வலியுறுத்தியயுள்ளதோடு, யுத்தம் குற்றச்சாட்டுக்கள்
தொடர்பான சர்வதேச விசாரணையை அரசாங்கம் நிராகரிப்பது ராஜ தந்திர ரீதியான புத்துசாரியமான
விடயமல்ல எனவும் அக்கட்சி;யின்; கண்டி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
விசாரணையை ஏற்றுக்
கொண்டு சாட்சியங்களை வழங்க வேண்டும். இது அரசாங்கத்திற்கு கிடைத்த நல்ல
சந்தர்ப்பமாகும். சர்வதேச ரீதியாக எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த
மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சாட்சியங்களுடன் காரணங்களை எடுத்து கூறிய
படையினர் மீதான அவப் பெயரை நீக்க முடியும். எமது பக்க நியாயத்தை எடுத்துக் கூறி
படையினரதும் நாட்டினதும் கௌரவத்தை பாதுகாக்க முடியும். இதனை நிராகரிப்பது
ராஜதந்திர மரபுகளை மீறும் புத்திசாலித்தனமற்றதாகும். இல்லாவிட்டால் சர்வதேச விசாரணையார்களை
தன்னச்சையாக விசாரணைகளை நடத்தி எமது நாட்டுக்கு எதிராக தீர்மானங்களை எடுப்பார்கள்.
இது பாதகமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளால்
மேற் கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட வேண்டுமென ஐநா விசாரணை குழு
தெரிவித்துள்ளது. எனவே, இவ் விசாரணைகளில் அரசாங்கம்
கலந்து கொள்வதன் மூலம் புலிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த அட்டூழியங்களையும்
அழிவுகளையும் தெளிவுப்படுத்தவும் வழியமைக்கும்
என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
இலங்கையில் இடம்பெற்ற
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விசாரணைக்குழுவை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
இந்தக் குழுவின் விசாரணைகளுக்குத் தேவையான சகலவிதமான ஒத்துழைப்புக்களையும்
வழங்கவும் தயாராகவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ் மக்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்பட்டு நீதி கிடைக்க
வேண்டியது மிகமிக அவசியமாகும். விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களையும்
ஆவணங்களையும் திரட்டும் செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். சாட்சியங்களின்
பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம் என்று தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியும் இது தொடர்பாக கருத்து
தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான சர்வதேச விசாரணைக் குழு நியமித்த பின்னர்
அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். யுத்தக் குற்றங்கள் தொடர்பில்
அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பின்வருமாறு
கருத்து தெரிவித்துள்ளார்
சர்வதேச விசாரணையொன்று இலங்கையின் யுத்த குற்றங்கள்
தொடர்பிலேயே ஏற்படுத்தப்படுகின்றது. இராணுவ குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச
தலையீடொன்று ஏற்படுத்தப்படுவது இலங்கையை பெரியளவில் பாதிக்கும். இவை தொடர்பில்
அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும். சர்வதேச தலையீட்டினை தடுக்க
ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் முயற்சிக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகள்
நம்பிக்கைகளை அளித்து தற்போது அவை எதையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மக்களைத்
தூண்டிவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மூலம் இலங்கை அரசாங்கத்
திற்கு பாரிய அடி காத்திருக்கின்றது. இறுதி யுத்தம் தொடர்பில் சாட்சியங்களை அளித்த
புலம் பெயர் தமிழர்கள் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலான பலர் உள்ளனர். இவை உண்மையா? பொய்யா? என்பது இனிமேல் சர்வதேச
மட்டத்திலேயே விசாரிக்கப்படும். எனவே அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் இனிமேல்
தயாராக வேண்டும் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள்
சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு
ஒத்துழைப்பு வழங்க போவதில்லையென்ற அரசாங்கத்தின் ; அறிவிப்புக்கு சில
தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.
சர்வதேச விசாரணையை
அரசாங்கம் நிராகரித்துள்ளது. எனவே விசாரணைக் குழு இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்படமாட்டாதென்று தேசப்பற்றுள்ள
தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இது
தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார
மேலும் தெரிவித்துள்ள கருத்தைப் பார்ப்போம்.
சொல்ஹெய்ம் ஓர்
யுத்த குற்றவாளி. இலங்கையில் யுத்தத்தை ஊக்குவித்து நாட்டை அழிக்க துணை போனவர்.
எனவே ஒரு பிரதிவாதி விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்க முன்வந்திருப்பது
கேலிக்கூத்தாகும். இதனை ஏற்றுக்கொள்ள
முடியாது. அத்தோடு அவரது சாட்சியங்கள் செல்லுபடியற்றது. அதற்கு சட்டபூர்வமான
அங்கீகாரம் கிடையாது. அத்தோடு அரசாங்கம் சர்வதேச விசாரணையை முழுமையாக
நிராகரித்துள்ளது.
நவிப்பிள்ளை
நியமித்திருக்கும் விசாரணைக்குழு இலங்கைக்கு வராமல் வெளியிலே விசாரணைகளை நடத்தும்.
அவ்வாறான விசாரணைகள் செல்லுபடியற்றதாகும். அத்தோடு சர்வதேச ரீதியாக அவ்வாறான
விசாரணைகள் சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.
அத்தோடு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜோர்தான் நாட்டு இளவரசர் இலங்கைக்கு சாதகமானவர் அல்ல.
எமக்கு எதிரான நடவடிக்கைகளையே அவர் முன்னெடுப்பார். சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம்
எதிர்ப்பு தெரிவித்துள்ளமை வரவேற்புக்குரியதாகும் என்று டாக்டர் வசந்த பண்டார
தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, அமைச்சரும் முன்னாள்
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள
விசாரணைக்குழு தொடர்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை
நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கை அடிப்படையில் அதற்கு இடமளிக்கவே
முடியாது.
பொருத்தமான அரசியல் தீர்வுக்கு செல்வதன் மூலமே சர்வதேச
அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும். சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வில்
அமைந்த அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு சென்றால் மட்டுமே சர்வதேச
அழுத்தங்களிலிருந்து இலங்கையினால் விடுபட முடியும். அவ்வாறான அதிகாரப் பகிர்வில்
அமைந்த பொருத்தமான அரசியல் தீர்வுக்கு செல்லும் பட்சத்தில் சர்வதேச
அழுத்தங்களிலிருந்து இந்தியாவே எம்மை விடுவிக்கும். சர்வதேச மேடையில் இந்தியா எமது
பக்கத்திலேயே இருக்கும். இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை குறித்த
விபரங்களை அனுப்பினால் இலங்கை விசாரித்துவிட்டு பதில் அனுப்பும். மாறாக இங்கு
வந்து விசாரணை செய்ய இடமளிக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சர்வதேச விசாரணைக் குழு தனது விசாரணைகளை இலங்கையில்
மட்டும் மேற்கொள்ளப் போவதில்லை. ஆசிய
பசுபிக்,
வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும்
பயணங்களை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடமிருந்து தகவல்களை திரட்டவுள்ளது.
அதேபோன்று ஏனைய தகவல் மூலங்களில் இருந்தும் தகவல்களை இந்தக் குழு திரட்டவுள்ளது.
இந்த விசாரணைக்
குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா?
இல்லையா? என்பதை நாடாளுமன்றமே
தீர்மானிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி அறிவித்துள்ள நிலையில்,
அதன் விளைவுகள் எப்படி
இருக்கும் என்பதை இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எதிர்கட்சிகள் விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளிக்குமாறும்,விசாரணைகளை எதிர்கொள்ளுமாறும் வற்புறுத்தி வருகின்ற நிலையில்,
விசாரணைக் குழுவை
இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படால்; சிலவேளை அரசாங்கத்தின் முடிவு வெற்றி பெறலாம். ஆனால,
இலங்கையில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை
மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க அந்த
வெற்றி உதவாது என்பது மட்டும் நிச்சயமாகும்.
No comments:
Post a Comment