Wednesday, December 23, 2015

மனித குலத்தை சீர்த்திருத்திய மாநபி - எம்.இஸட்.ஷாஜஹான்

உலகிற்கு அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஜனன தினம் இன்றாகும்.
 முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை  சரித்திரம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, July 18, 2015

பாவங்களை அகற்றும் புனித ரமழான்


(18-6-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை.)

'நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் 'தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்
                       (சூரத்துல் பக்கரா)
ஆம்! புனித ரமழான் மாதம் மீண்டும் ஒருமுறை எமை நாடி வந்திருக்கிறது. பாவக்கறை அகற்றும் மாதம் பிறந்திருக்கிறது. புண்ணியம், பொழியும் கண்ணியமிகு இனிய ரமழான் மலர்ந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச உலக வாழ் முஸ்லிம்களுக்கு இனிய ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.
இறை திருப்தியே மனித வாழ்க்கையின் ஒரே இலக்காகும். அந்த இறை திருப்தியும் பொருத்தமும் தூய்மையான உள்ளத்துடன் வரும் மனிதர்களுக்குத்தான் கிடைக்கும். ஏக இறைவனிடம் கிடைக்கும் அந்த உளத் தூய்மையை எம்மிடத்தில் ஏற்படுத்தவே சங்கைமிகு மாதம் உதித்திருக்கிறது.

மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்

(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும் நோற்றுவிட்டு இன்று நாங்கள்  இனிய நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு  இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.