Saturday, July 18, 2015

பாவங்களை அகற்றும் புனித ரமழான்


(18-6-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை.)

'நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் 'தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்
                       (சூரத்துல் பக்கரா)
ஆம்! புனித ரமழான் மாதம் மீண்டும் ஒருமுறை எமை நாடி வந்திருக்கிறது. பாவக்கறை அகற்றும் மாதம் பிறந்திருக்கிறது. புண்ணியம், பொழியும் கண்ணியமிகு இனிய ரமழான் மலர்ந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச உலக வாழ் முஸ்லிம்களுக்கு இனிய ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.
இறை திருப்தியே மனித வாழ்க்கையின் ஒரே இலக்காகும். அந்த இறை திருப்தியும் பொருத்தமும் தூய்மையான உள்ளத்துடன் வரும் மனிதர்களுக்குத்தான் கிடைக்கும். ஏக இறைவனிடம் கிடைக்கும் அந்த உளத் தூய்மையை எம்மிடத்தில் ஏற்படுத்தவே சங்கைமிகு மாதம் உதித்திருக்கிறது.
ரமழான் மாதம் 'தக்வா' எனும் இறையச்சத்தை முஃமீன்களிடத்தில் ஏற்படுத்த அரிய வாய்ப்பைத் தருகிறது. இறையச்சம் என்பது நன்மைகள் செய்யவும் தீமைகளிலிருந்து விலகி நடக்கவும் நெறிப்படுத்துகிறது.
புனித ரமழான் மாதம் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''உங்களுக்கு அருள் நிறைந்த ஒரு மாதம் வந்துவிட்டது. அதில் உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதிலே சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. அதிலே ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு காணப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அந்த சிறந்த இரவு புனித லைலத்துல் கத்ர் இரவாகும். அந்த இரவு ரமழான் மாதத்தில் மறைந்திருக்கும் அருள் நிறைந்த இரவாகும். துஆக்கள், பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் இரவாகும்.
இந்த புனித மாதத்தின் முதல் பத்து நாட்களில் இறைவனின் பேரருள் மழை நீரைப் போன்று பொழியுமென்றும் அதையடுத்து வரும் பத்து நாட்களில் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இறுதிப் பத்து நாட்களில் நரக தண்டனையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதனுக்கு வருடத்தின் ஏனைய பதினொரு மாதங்களை விடவும் வேறுபட்ட வாழ்க்கை முறை ஒன்றை இந்த புனித ரமழான் தருகிறது. அவரது உணவு, உறக்கம், நாளாந்த பழக்க வழக்கம் என்பன மாற்றம் அடைகின்றன.
நோன்பு ஒரு மனிதனை புடம்போடுகிறது. பக்குவப்படுத்துகிறது, நேர்வழி காட்டுகிறது. இறை நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. பாவங்களிலிருந்து தடுத்து நன்மை செய்ய ஏவுகிறது.
ரமழான் எல்லா மாதங்களையும் விட சிறந்ததாகும். எந்த மனிதன் ரமழான் மாதத்தில் ஈமானின் நிலையில் நற்கூலியின் எண்ணத்தில் தனது கணக்குகளை பார்த்தவாறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறாரோ, அவரது தாய் அவரை பெற்றெடுத்தபோது இருந்ததைப் போன்று அவர் தனது பாவங்களிலிருந்து தூய்மையடைந்து விடுகிறார் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, முற்று முழுதான தூய்மையடைந்து இறைவனை வணங்க விரும்புகின்றவர்களுக்கே ரமழான் பரகத்திற்குரிய மாதமாகும்.

சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                         அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
மூன்று பேர்களின் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை. முதலாவது நோன்பாளி நோன்பு திறக்கும் வரை கேட்கும் துஆ. இரண்டாவது நீதியுள்ள அரசன் கேட்கும் துஆ. மூன்றாவது அநீதி இழைக்கப்பட்டவன் கேட்கும் துஆ.
                       - நபிகள் நாயகம் (ஸல்)

நோன்பின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் நான்காவது கடமை நோன்பாகும். நோன்பானது ஆன்மாவை மேம்படுத்தக்கூடிய ஆத்மீக பயிற்சியாக விளங்குகிறது.
நோன்பிருப்பதன் மூலமாக ஒருவரின் உள்ளத்தில் ஆன்மீகப் புரட்சி ஏற்படுகிறது. இறைவனின் விருப்பத்திற்கிணங்க நடக்க வேண்டுமென்ற ஆர்வம் இயல்பாகவே அவன் உள்ளத்தில் வேரூன்றி விடுகிறது. தீய செயல்களை மறுக்கின்ற மன நிலையும் நற்செயல்களை செய்யவேண்டுமென்ற ஆர்வமும் அவனிடத்தில் ஏற்படுகிறது.
ஹஸ்ரத் அபுஹமாமா அறிவிக்கிறார்கள். நான் நபியவர்களிடம் இவ்வாறு வினவினேன்.
''யார சூலல்லாஹ்! என்னை சுவர்க்கத்தில் நுழையச் செய்விக்கின்ற ஒரு நற்செயலை கூறித் தாருங்கள். ''அதற்கு அன்னார் கூறினார்கள். உமக்காக நோன்பு இருக்கிறது. அதனைப் போன்று எதுவுமில்லை''
முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ{ஹரைரா (ரழி) அவர்களும் அபூசைத் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
''புகழுக்ரியவனும் தனிப் பெரும் சிறப்புடையவனுமாகிய அல்லாஹ் கூறுகிறான். 'நோன்பு தனிப்பட்ட முறையில் எனக்காக செய்யப்படுவதாம். நானே அதற்கான கூலியாக ஆகிவிடுகிறேன்'' நோன்பு நோற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய இரண்டு சந்தர்ப்பங்கள் உள்ளன. நோன்பாளி நோன்பு துறக்கும் போது மகிழ்ச்சியடைகிறார்'' அல்லாஹ்வை சந்திக்கும்போது மகிழ்ச்சி கொள்கிறார். ''முஹம்மத்தின் உயிர் எவன் கையில் இருக்கிறதோ, அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பு நோற்பவரது வாயின் மணம் இறைவனிடத்தில் கஸ்தூரியின் மணத்தை விடவும் தூய்மையானது.

நோன்பின் விதிகள்

வயது வந்த ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கும் பயணிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் வேறு நாட்களில் நோன்பிலிருந்து ஈடுசெய்ய வேண்டும். நீண்ட காலமாக நோயுற்றுள்ள ஒருவர் நோன்பின்றி பகரமாக ஓர் ஏழைக்கு தினமும் (அதாவது ரமழான் மாதத்தின் முப்பது நாளும்) உணவளிக்க வேண்டும்.
மாதவிடாய் உள்ள பெண்களும் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும்  நோன்பிருக்கக் கூடாது. அவர்கள் பின்னர் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.
நோன்பென்பது கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமலும் குடிக்காமலும் முறைப்படி இருத்தலாகும். கிழக்கு வெளுக்கும் முன் உணவுண்டு (ஸஹர் செய்து) நோன்பிருக்க வேண்டும்.

ஸஹர் செய்வதன் சிறப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் ஸஹரின் (அதிகாலை உதயமாவதற்கு முன்னுள்ள நேரத்தில்) உணவை உண்ணுங்கள். ஏனெனில் ஸஹரில் உணவை உண்பதில் பரகத் (அருள்) உள்ளது.' (திர்மிதி)
மிகப் பிந்திய ஸஹரும் விரைவாக குறித்த நேரத்தில் நோன்பு திறப்பதும் சிறப்பானதாகும்.

ரமழானில் செய்ய வேண்டியது
 கண்ணியமிகு ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்த மாதத்தை ஒவ்வொருவரும் நன்கு பயன்படுத்தி இறைவனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஐங்காலத் தொழுகையை முடியுமானவரை பள்ளிவாசலில் ஜமா அத்துடன் நிறைவேற்றி வருதல், சுன்னத் தொழுகைகளையும் தொழுது வருதல் குறைந்த ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ' அல்குர்ஆனை ஓதி வருதல், தினமும் தராவிஹ் தொழுகையை நிறைவேற்றுதல், தினமும் திக்ருக்களை ஓதி வருதல், அதிகமாக ஸதக்கா செய்தல், ஸக்காத்துல் பித்ராவை வழங்குதல், கடைசி பத்து தினங்களில் இஃதிகாப் இருத்தல் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் சமூகத்திற்காகவும் அதிகம் அதிகமாக துஆ (பிரார்த்தனை) செய்தல் போன்ற அமல்களையும் நற்காரியங்களையும் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தளவு பேணி நடந்தால் அவர்களுக்கு ரமழானின் முழுமையான அருள் கிடைக்கும்.
அதேபோன்று நோன்பை முறிக்கக் கூடிய நோன்பை வீணாக்கக்கூடிய காரியங்களிலிருந்து ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூ {ஹரைரா (ரழி) அறிவிக்கிறார்கள். எத்தனையோ நோன்பாளிகள் இருக்கின்றனர். ''அவர்களுடைய நோன்பின் மூலமாக அவர்களுக்கு தாகம் மாத்திரமே ஏற்படுகிறது. எத்தனையோ இரவில் எழுந்து தொழக்கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு விழித்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடைப்பதில்லை.
ஆகவே, நோன்பாளிகள் இது பற்றி சிந்திக்க வேண்டும். நோன்பின் உண்மைநிலையைப் பற்றி பலர் அறியாமல் உள்ளனர். பொய் பேசுதல், புறம் கூறுதல், சண்டை பிடித்தல், வீணான பேச்சு பேசுதல், போன்றவைகளிலிருந்து தவிர்த்து நடக்க வேண்டும். மாறாக இறை தியானத்தில் மூழ்கி இருக்க வேண்டும். நற்செயல்கள் புரிய வேண்டும். தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் முழமையாக நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.
யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
''நோன்பு (பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்) ஒரு கேடயமாகும்'' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே, இந்த புனித மாதத்தில் தீமைகளிலிருந்து முழுமையாக விலகியிருந்து நன்மைகள் பல செய்து ஏக இறைவனின் அருளையும் இறை திருப்தியையும் பெற முயற்சி செய்ய வேண்டும்.
இளைஞர்கள் நோன்பு காலத்தில் இரவு வேளைகளில் வீணாக சுற்றித் திரிவதையும் வீதிகளில் விளையாடுவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றைய சமயத்தவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. இரவு தராவீஹ் தொழுகையின் பின்னர் வீட்டுக்கு செல்ல வேண்டும். வீதிகளில் கூடி நின்று அரட்டை அடிப்பது கூடாது. அது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விலங்கிடப் படும் மாதம் இது என்பதால் இந்த மாதத்தில் அதிகமாக நன்மைகளை செய்வதிலேயே; நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இம்மை மறுமையின் விதை நிலமாகும். நல்விதைகளை விதைப்பதற்கான காலம் இந்த ரமழான் மாதம்  ஆகும்.  ஆகவே இந்த மாதத்தில் நல் விதைகளை விதைப்போம். மறுமையில் சுவர்க்கத்தை அறுவடை செய்வோம்.


-      எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment