(12-12-2016 அன்று இக்கட்டுரை வீரகேசரியில்
பிரசுரமானது.)
உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும்
தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய
தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம்
உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிபூரண மனிதராக உலகில்
வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது சொல், செயல்கள் யாவும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகும்.
நபியவர்கள் தோன்றிய அறியாமை
எனும் இருள் சூழ்ந்த 'ஜாஹிலிய' காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலைமைகளையும், அந்தப் பின்னணியையும் அறிந்துகொள்வதன்
மூலமாக நபியவர்கள் அன்றைய சமுதாயத்தில் ஏற்படுத்திய மாபெரும் மாற்றத்தை
அறிந்துகொள்ள முடியும்.
இஸ்லாம் என்ற பதத்தின் கருத்து சாந்தி, சமாதானம்,
சகோதரத்துவம் என்பதாகும். நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் யாவுமே சாந்தி, சமாதானம்,
சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அவரது முழு வாழ்க்கையும் அதுவாகவே அமைந்துள்ளது.
அந்த வகையில்
நபியவர்கள் சமாதானத்தை நிலை நிறுத்துவதில் அளித்த பங்களிப்பை வரலாறு சான்று பகிர்கிறது.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து 'உங்களில் தொழுகை, நோன்பு , ஸக்காத் இவைகளைவிடவும்
மேன்மையான நன்மைத் தரக்கூடிய காரியத்தை அறிவிக்கட்டுமா? அதுதான் உங்கள் இருவருக்கிடையில்
சமாதானம் செய்து வைத்தல்' என்று கூறினார்கள்.
இன்று உலகின் பல நாடுகள் யுத்த அரக்கனின் கோரப்
பிடிக்குள் சிக்குண்டு இருக்கின்றன. முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கிடையிலும், முஸ்லிம்
பிரிவுகள் மத்தியிலும் பிரச்சினைகளும் மோதல்களும் இடம்பெற்று வருகின்றன. ஒரு முஸ்லிம்
பிரிவு மற்றைய முஸ்லிம் சகோதர பிரிவினரை கொன்றொழிக்கும்
கொடூரம் நடந்து கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கொடூரமான முறையில் படுகொலை
செய்யும் காட்டு மிராண்டித்தனம் தினம் தினம் நடந்து வருகின்றது. முஸ்லிம்களிடையே கருத்து
வேறுபாடுகள் ஏற்பட்டு மோதல்கள், வன்முறைகள், பழிவாங்கல்கள், கொலைகள் என வேண்டத்தகாத
சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
உலகிற்கு
சத்தியமார்க்கத்தை கொண்டு வந்து சாந்தி சமாதானத்தை, சகோதரத்துவத்தை நிலை நிறுத்திய
முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் இந்த வேளை, நாம் அந்த சாந்தி நபியவர்கள்
வாழ்ந்து காட்டிய வழியில் வாழ்கிறோமா? ஏன்று
சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
அந்த வகையில் நபியவர்கள் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக
வழங்கிய பங்களிப்பை மீட்டிப்பார்க்க வேண்டும்.
'ஹிஜ்ரத்' ஓர் திருப்புமுனை என்று கூறுவது போன்று
அண்ணல் நபியவர்கள் மக்காவில் சமாதானத்தை நிலை நிறுத்த முயன்றாலும், மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றதன் பின்னர் அதில் பெரு வெற்றி கண்டார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் புதியதொரு சமூகத்தின் தலைவர் என்ற வகையில் மதீனா சென்றதும்
பல ஆரம்ப நடடிக்கைகளையும் சில அமைப்புகளையும்
உடனடியாக செய்ய வேண்டியிருந்தது. அங்கு நபியவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்லாமிய சமூக அமைப்புக்காக
சமாதானத்தின் அடி;ப்படையில் எழுப்பப்பட்ட திட்ட அம்சங்களாகும்.
ஹவுஸ், கஸ்ரத் கூட்டத்தாருக்கு மத்தியில் பரம்பரையாக
இருந்து வந்த குலச் சண்டையை நிக்கி இரு கூட்டத்தாருக்குமிடையில் சமாதானத்தை செய்து
வைத்து சகோதரத்ததுவ ஒற்றுமையை நிலை நிறுத்தினார்கள்.
அதேவேளை, மக்காவிலிருந்து மதீனாவிறு ஹிஜ்ரத் செய்த
முஹாஜிரீன்களுக்கும் மதீனாவாசிகளான அன்சாரீன்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவப்
பிணைப்பினை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம்
சகோதரத்துவத்தின் வழி பிறப்பதுதான் சமாதானம் என்ற கோட்பாடு நிலை நிறுத்தப்பட்டது.
முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்தை நிலை நிறுத்தியதைத்
தொடர்ந்து முஸ்லிம்களுக்கிடையேயும் ஏனைய சமூகத்தினருக்கிடையேயும் ஜக்கியத்தையும் ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும்
வளர்த்துக்கொள்வதற்கு இரு தரப்பினருக்கும்
பொதுவான் அரசியலமைப்பை தழுவிய ஓர் சமாதன உடன்படிக்கையை செய்து கொண்டார்கள். இது ஒருபக்கத்தில்
முஹாஜிரீன்களையும் அன்சாரீன்களையும் மறுபக்கத்தில் யூதர்களையும் மதீனாவில் வாழ்ந்த
ஏனைய கோத்திரத்தவர்களையும் கருத்திற்கொண்டு வரையப்பட்டதாகும். அது மதீனா சாசனம், மதீனா
பிரகடனம், மதீனா பட்டயம் என அழைக்கப்படுகிறது.
முஹம்மது நபியவர்கள் சமாதான விருப்பம் கொண்டவர்கள்
என்பதை இன்னொ சம்பவமும் எடுத்துக்காட்டுகிறது.நபி (ஸல்) அவர்கள் 1500 தோழர்களுடன் கஹ்பதுல்லாவை
உம்றாச் செய்யும் நோக்குடனும், முஹாஜிரீன்கள் ஆறு வருடங்களாக பிரிந்திருந்த தமது தாய் நாட்டையும் உற்றார் உறவினர்களையும் காணும் நோக்கத்தோடும் ஹிஜ்ரி
6 இல் மக்காவை நோக்கிச் செல்லும் வழியில் ' உதைபியா' எனும் கிணற்றடியில் தங்கினார்கள்.
ஆயினும் குறைஷியர்கள் முஸ்லிம்களை மக்காவில் நுழைய அனுமதிக்கவில்லை. போர் செய்வதை விரும்பாத
சமாதான விரும்பியான வளளல நபியவர்கள் மக்கா
குறைஷியர்களுடன் 'உதைபியா உடன்படிக்கை' எனும்
சமாதான உடனபடிக்கையை
செய்து கொண்டார்கள். கேலித்தனமான உடன்படிக்கையை
நபியவர்கள் செய்து கொண்டார்கள என அப்போது விமர்சிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இவ்வருடம் மக்காவுக்கு பிரவேசிக்கக்
கூடாது. அடுத்தவருடம் நிராயுதபாணியாக வரவேண்டும். முஹாஜிரீன்;கள் மக்காவில் நிரந்தரமாக
தங்க விரும்பினால் தடுக்கக் கூடாது. இவ்வாறு மக்காவாசிகளின் விருப்பங்களுக்குநபியவர்கள்
தாராளமாக விட்டுக் கொடுத்தார்கள். பலர் இதனை விரும்பவில்லை. ஆனால், பெருமானாரின் நியாயப்பூர்வமான
நடவடிக்கைகளையும், ராஜ தந்திரத்தையும், சமாதானத்தைத் தேடுவதில் நபியவர்களின் விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையையும் இந்த உடன்படிக்கை மூலமாக அறியக் கூடியதாக உள்ளது.
இந்த உடன்படிக்கையை மக்காவாசிகள் இரண்டே ஆண்டகளில்
'பனூகுஸாஆ' வம்சத்தினரை தாக்கியதன் மூலமாக மீறினார்கள். நபியவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன்
மக்காவை நோக்கிப் படையெடுத்தார்கள். இரததம் சிந்தாமல் மக்கா கைப்பற்றப்பட்டது. மக்கா
இஸ்லாத்தின் வசமானது. ஹிஜ்ரி 8 இ.ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் எதிரிகள் எதிர்பாராதவாறு
அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இது நபியவர்களின் உயர்ந்த பண்மை எடுத்துக்காட்டுவதுடன், அவர்கள் ஒரு சமாதான
விரும்பி என்பதை விளக்கி நிற்கிறது.
முஹாஜிரீன்கள் அன்சாரீன்களுக்கிடையில் சகோதரத்துவப்
பஜணைப்பை ஏற்படுத்துதல், மதீனா சாசனம், ஹவுஸ், கஸ்ரத் கோத்திரத்தினரின் ஒற்றுமை, ஹுதைபியா
உடன்படிக்கை போன்றன சமாதானத்தை நிலை நாட்டுவதில்
நபியவர்களின் சிறப்பான பங்களிப்பபை எடுத்துக்காட்டுகிறது.
அருமை நாயம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை
கொண்டாடும் நாம், அவர்கள் சமாதானம், சகோதரத்துவம், ஒற்றுமைத் தொடர்பாக நடந்து கொண்ட
முறைகளை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அல்குர்ஆன் கூறும் வழியிலும், நபியவரகள் அதன்படி வாழ்ந்து காட்டிய நபியின் வழியிலும் நாங்கள் வாழ்ந்தால் சமாதானம் என்றும் நிலைத்து நிற்கும்
என்பதில் எவ்வித ஜயமுமில்லை.
அனைவருக்கும் சீரத்துந் நபி தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
- எம்.இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment