- கலாநெஞ்சன் ஷாஜஹான்
இலங்கையில் சிறுவர் பாலியல்
துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து
கொண்டே இருக்கின்றன.
சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர்
கொலை செய்யப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும் சிறுவர் உரிமைகள் பல்வேறு வகைகளிலும்
மீறப்படல் என்று கவலை தரும் விடயங்கள்
தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதேவேளை, இலங்கை பெண்களும், சிறார்களும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொடர்ந்தும்
பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படும் நிலைமை காணப்படுவதாக அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான சட்டவிரோத ஆட்கடத்தல் குறித்த
உலகளாவிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
என்று பி.பி.சி. தமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பல விபச்சார விடுதிகளில்
இலங்கை சிறார்கள் மற்றும் பெண்களுடன் தாய்லாந்து, சீனா, தெற்காசிய
நாடுகள் , ஐரோப்பா மற்றும் முன்னாள்
சோவியத் ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பலவந்தமாக
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
குறிப்பாக பெண்களை விட இலங்கையை சேர்ந்த
ஆண் சிறுவர்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவது அதிகமாகக் காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மலையகத்தை சேர்ந்த சிறுவர்கள்
கொழும்பு வீடுகளிலும், உலர்வலய
பண்ணை நிலங்களிலும் சிறுவர் தொழிலாளர்களாக
பயன்படுத்தப்படுவதுடன் சில தருணங்களில் பட்டாசுக்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பணிக்கமர்த்தப்படுவதாகவும், அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படி பணிக்கமர்த்தப்படும் சிறார்கள் உடல் ரீதியாகவும், பாலியல்
ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதுடன், அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் அமெரிக்க அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது இவ்வாறிருக்க, கடந்த
வருடத்தின் முதல் 6 மாத காலத்தினுள் சுமார் 900 பாலியல் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும், இவற்றுள்
சுமார் 700 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள்
குறித்த முறைப்பாடுகள் என பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.
இன்று மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் நற்பெயருக்கும் பெரும் சவாலாக
இருக்கும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார சட்ட ரீதியான பல
காரணங்களும் வேறுபல காரணங்களும் இருப்பதாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 'லங்காதீப' சிங்களப்
பத்திரிகை மற்றும் ஊடகக்குழு போன்றவற்றால்
இணையத்தளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
பங்குகொண்ட 60 சதவீதமானவர்கள், சிறுவர் பாலியல் வன்புணர்வில்
ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படாத போதிலும் சிறுவர் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்
என இணைத்தள ஆய்வின் முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் சுகாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தக்கூடியவாறு அநாவசியமாக துன்பத்திற்குள்ளாக்குவதோ, அல்லது
சிறுவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதை தவிர்ப்பதையோ சிறுவர்
துஷ்பிரயோகம் எனக் குறிப்பிடுவர்.
இக்கட்டுரையில் நாம் ஆராய்வது சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பரந்துப்பட்ட கருத்தில் உள்ளடங்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றான சிறுவர்
பாலியல் துஷ்பிரயோகம் பற்றியதாகும்.
சிறுவர் எனப்படுவோர் யார்?
பதினெட்டு வயதிற்குக் குறைந்த மனிதப் பிறவிகள் பிள்ளைகள் அல்லது சிறுவர்கள் எனப்படுவர். ஆனால் இலங்கையை பொருத்தவரையில் பல்வேறு சட்டங்களிலும்
வேறுப்பட்ட வயதெல்லை சிறுவர் என்ற சொற்பிரயோகத்தை பிரதிபலிக்கின்றன.
1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
பொதுச் சபையினால் உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைகள்
பற்றிய சமவாயம் 18 வயதிற்குட்பட்ட அனைத்து மனிதப் பிறவிகளும் சிறுவர்
என வரையறுக்கின்றது. அத்துடன் இச்சமவாயம் ஒவ்வொரு
நாளும் தமது நாட்டின் வௌ;வேறான வயதெல்லையை
வைத்திருப்பதற்கு அனுமதிக்கிறது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
அடுத்தவரில் தங்கி வாழுகின்ற
மற்றும் வளர்ச்சி சார்ந்த முதிர்ச்சியடையாத ஒரு பிள்ளையை
தம்மால் உண்மையில் புரிந்துகொள்ள முடியாத பாலியல் செயலொன்றுக்காத் தமது விருப்பத்தை விழிப்புடன் தெரிவிக்க முடியாத ஒரு
நிலையில், அவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுத்தலையும் குடும்பச் செயற்பங்கு தொடர்பான சமூகக் கட்டுப்பாடுகளை மீறும் நிலைமையொன்றில் ஈடுபடுத்தலையும்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் எனக் குறிப்பிடுவர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது
எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை
கேள்விக்குரியாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்துவிடுகிறது.
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்கள் யார்?
1. இரத்த உறவினர் (தந்தை, சகோதரர்கள்)
2. நெருங்கிய உறவினர்கள் (மாமன், சித்தப்பா)
3. குடும்ப நண்பர்கள்.
4. பிள்ளையின் பாதுகாவலர்.
5. அயலவர்கள் (குறிப்பாக வீட்டுக்கு
வரும் அயற்புற வளர்ந்தோர்)
6. ஆசிரியர்கள்.
7. வணக்கத்திற்குரியோர்.
8. வேலையாட்கள்.
9. சாரதிகள்.
10. சமூகத்தில் மதிக்கப்படுவோர்.
11. பிரமுகர்கள்.
12. தன்னினச் சேர்க்கையில்
ஈடுபடுவோர்.
13. உல்லாசப் பிரயாணிகள்.
14. திட்டமிட்டக் குழுக்கள்
(ஆபாச நிழற்படங்கள், வீடியோ படங்கள் எடுப்போர், பாதாள உலகத்தினர், விபசார தொழிலில் சிறுவர்களை ஈடுபடுத்துவோர்)
15. சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்
கடமையாற்றுவோர் என அவர்களை குறிப்பிட்டுக் காட்டலாம்.
சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறையானது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பலாத்காரமான திடீர் தாக்குதல்.
இது பொதுவாக முன்பின் தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்படும் ஒரு தனி நிகழ்ச்சியாகும். இது பிள்ளைகளுக்கு
அதிர்ச்சிமிக்க ஒன்றாக அமையலாம்.
2. குறிப்பிட்டதொரு கால எல்லையில்
தொடர்ச்சியாகத் தொல்லைக் கொடுத்தல்.
இது பொதுவாகக் குடும்பத்துடன் தொடர்புபட்டது. இதில் பெரும்பாலும் காயங்கள் ஏற்படுவதில்லை. ஏனெனில்
இங்கு கற்பழிப்பு இடம்பெறுவதில்லை. இதில் பல்வேறு
வகையான பாலியல் தொடர்புகள் மட்டும் இடம்பெறும்.
3. பண இலாபத்திற்காக பாலியல் ரீதியான சுரண்டல்.
இதில் சிறுவர் இழிபொருள் வர்ணனை போன்றனவும், சிறுவர் விபசாரமும் இடம்பெறும்.
4. ஸ்பரிசத் தொடர்பற்ற பாலியல் துஷ்பிரயோகம்.
இதில் ஆபாசத் திரைப்படம் போன்றவற்றுக்குப் பயன்படுத்துதலும் , கண்காட்சி
போன்றவற்றிற்கு பயன்படுத்துதலும் அடங்கும்.
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
எளிதில் ஆளாவதற்கு பல காரணங்கள் உள்ளன. கட்டிளமைப் பருவத்தில் ஏற்படும் உடல், மனவெழுச்சி
மாற்றங்கள், அறியாமை, படிப்பறிவின்மை, பாலியல்
தூண்டலை ஏற்படுத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், சஞ்சிகைகள், ஆபாச
நிழற்படங்கள், பாடல்கள், வீடியோ காட்சிகள் போன்றன சிறுவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருத்தல், தீய
நண்பர்களின் சகவாசம், பெற்றோரின்
கவனயீனம், பெற்றோர் வெளிநாடு சென்றிருத்தல், குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்திருத்தல், சிறுவர்
வேலைக்குச் செல்லல், செல்லிடப்பேசி இணையத்தினூடாக தவறான நண்பர்களின்
சகவாசம் இணையத்தை தவறாகப் பயன்படுத்தல், பாட விதானத்தில் பாலியற்கல்விக்கு உரிய இடம் அளிக்காமை
போன்றன. சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எளிதில் ஆளாவதற்கு பிரதான காரணங்களாக குறிப்பிட்டுக் காட்டலாம்.
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உள்ளாவதன் காரணமாக அவர்களில் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
1. கல்வி சீர்குலையலாம்.
2. அறிவு, மனவெழுச்சி
மற்றும் சமூக வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படலாம்.
3. சமூகத்தால் இழிவுபடுத்தப்படல், குற்றவாளியாக முத்திரை குத்தப்படல்.
4. முறையற்ற அல்லது தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபடப் பழகலாம்.
5. உள நோய்க்கு
ஆளாகலாம்.
6. ஒத்தபாலாருடன் மாத்திரம் தொடர்புகொள்ளப் பழகலாம்.
7. பிள்ளை பெரியவனான பின்னர்
பாலியல் சார்ந்த துர்ச் செயல்களில் ஈடுபடலாம்.
8. விபசாரத் தொழிலில் ஈடுபடலாம்.
9. பாலியல் நடத்தை தொடர்பான பயமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படலாம்.
10. திருமணம் தொடர்பான அச்சம் ஏற்படலாம்.
11. பல்வேறு வகையான பாலியல் நோய்களுக்கு ஆளாகலாம்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்களாவர். பாடசாலை
ஆசிரியர்களுக்கும் இவ்விடயம் தொடர்பில்
முக்கிய பொறுப்புள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு
சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், மட்டுப்படுத்தப்பட்ட
அளவில் வயதுப் பிரிவுக்கேற்ற வகையில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
சுகாதாரமும் உடற்கல்வியும்
பாடத்தின் ஊடாகவும் இது தொடர்பாக மானுடர்களிடத்தில்
அறிவுறுத்த முடியும்.
இப்பிரச்சினை தொடர்பில் சமூகத்தைச்
சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பங்களிப்பு வழங்க
வேண்டியது மிக அவசியமாகும்.
இப்பிரச்சினை தொடர்பில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பங்களிப்பு வழங்க வேண்டியது மிக அவசியமாகும்.
ReplyDeleteஆம்...😯
Delete