Friday, March 15, 2013

எயிட்ஸ் நோயும் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்களும்



-   கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed
  

எயிட்ஸ் (AIDS) என்ற சொல்லை கேட்டாலேயே எல்லோருக்கும் அச்சம்
ஏற்படும். இந்நோய் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகும்.

உலகின் பல நாடுகளிலும் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளான பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.


எயிட்ஸ் நோய்க்கு உலகில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், எச்.ஐ.வி. கிருமிகளின் வேகத்தைக் குறைத்து, அவற்றை ஓரளவு கட்டுப்பாடிற்குள் வைத்திருக்கக்கூடிய மருந்துகள் தற்போது உள்ளன.



 
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்நோயின் தாக்கம் குறைந்தளவில் இருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் எமது நாட்டிலும் இந்நோய் வேகமாகப் பரவலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நோய் முதன் முதலாக 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு இலங்கையில் முதல் எயிட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். 1503  மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் எமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள் சிகிச்சை பிரிவினரால்  நடத்தப்பட்ட கருத்தரங்கிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் கம்பஹா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் பத்மசிறி, விஷேட வைத்திய நிபுணர்களான ஜி. வீரசிங்க, ஜயாதரி ரணதுங்க, வைத்தியர்களான லயனல் அழககோன், மஹேஸ் ரத்நாயக்க ஆகியோர் இக்கருத்தரங்கில் விளக்கமளித்தனர்.


எயிட்ஸ் என்றால் என்ன?



மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தி அல்லது ஆற்றல் குறைவடைதலே எயிட்ஸ் நோயாகும்.

எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் யாரால் பரவுகிறது?

1. விபசாரிகள்
2. போதைப் பொருளை ஊசி மூலம் ஏற்றிக்கொள்பவர்கள்
3. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள்
4. சிறைக் கைதிகள்
5. கடற்கரைப் பையன்கள்


கடற்கரைப் பையன்கள் என்போர் யாவர்?

  கடற்கரைப் பகுதிகளிலோ அல்லது அதனை அண்டியப் பகுதிகளிலோ இருந்தபடி பணத்திற்காகவோ அல்லது பொருட்கள் மற்றும் அன்பளிப்புக்களுக்காகவோ விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் கடற்கரைப் பையன்கள் எனப்படுவர்.
  இவர்கள் வேறு தொழில்களிலும் ஈடுபட்டுக் கொண்டவர்களாக இருக்கலாம். (உதாரணம் : ஹோட்டல் தொழிற்துறை, உல்லாசப் பயண வழிகாட்டிகள்)
  இவர்கள் 17 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். சராசரி வயது 26 வருடங்கள்.
  97 சதவீதத்தினர் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துள்ளவர்களாவர்.
  99.5 சதவீதத்தினர் எச்.ஐ.வி. தொடர்பாகவும், எயிட்ஸ் தொடர்பாகவும் அறிந்து வைத்துள்ளனர்.
  இவர்கள் பாலியல் தொடர்புகளின் போது ஆணுறைகளைப் பாவிப்பது குறைவாகும்.
  கடற்கரைப் பையன்கள் ஆண்களோடு மாத்திரம் பாலியல் தொடர்பு வைப்பவர்கள், ஆண்களோடும் பெண்களோடும் பாலியல் தொடர்பு வைப்பவர்கள், திருமணம் முடித்தவர்கள், திருமணம் முடிக்காதவர்கள், திருமணம் செய்தும் மனைவியுடன் பாலியல் தொடர்பு கொள்வதில் நாட்டம் குறைந்தவர்கள் அல்லது பாலியல் தொடர்பு வைக்காதவர்கள் என பல பிரிவினர் உள்ளனர்.
  கடற்கரைப் பையன்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களுடனும் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டவர்களுடனும் விபசாரத்தில் ஈடுபட்டவர்களாக உள்ளனர்.
  இவர்களில் 98 சதவீதத்தினர் பணம் அல்லது பொருள் ஈட்டும் நோக்கிலேயே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.



இலங்கையில் விபசாரிகள்


  இலங்கையில் 40 ஆயிரம் விபசாரிகள் உள்ளனர். உண்மையில் இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம். ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவில் தெரிய வரும்.
  40 ஆயிரம் விபசாரிகளுடன் 80 ஆயிரம் பேர் தினமும் பாலியல் ரீதியான சேவைகளை பெற்று வருகின்றனர்.
  இலங்கையில் வீதியோரங்களிலும் விபசார விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் மசாஜ் நிலையங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் கசினோ கிளப்களிலும் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




எயிட்ஸ் மற்றும் ஏனைய பாலியல் நோய்கள் தொடர்பான அபாயங்கள்

  எமது நாட்டில் வருடாந்தம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானோர் பாலியல் நோய்களுக்காக அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்றனர்.
  உண்மையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், வருடத்திற்கு 60 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
  சிபிலிஸ், ஹேர்பிஸ், கொனேரியா போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில்)
  2011 இல் இலங்கையில் 146 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
  சிறைக் கைதிகளிடையே ஓரினச் சேர்க்கை அதிகம் காணப்படுவதால் அங்கு எயிட்ஸ் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இலங்கையின் சிறைச்சாலைகளில் ஆணுறைகளை பாவிப்பதற்கான அனுமதியோ அல்லது அதற்கான வசதிகளோ கிடையாது.
  இலங்கையில் 95 சதவீதமானோருக்கு பாலியல் தொடர்பின் மூலமாகவே எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படுகிறது.


எச்.ஐ.வி. வைரஸ் பின்வருவனவற்றின் காரணமாக இன்னொருவருக்கு தொற்றாது

1. நுளம்பு கடித்தல்
2. கழிவறையைப் பயன்படுத்துதல்
3. அருகருகே இருத்தல், கட்டித் தழுவுதல், கை குலுக்குதல்
4. ஒன்றாக இருந்து உணவருந்துதல்
5. ஒரே அறையில் வசித்தல்.


எச்.ஐ.வி.யிலிருந்து பாதுகாப்புப்பெறும் முறை

1. நம்பிக்கையான ஒருவன் அல்லது ஒருத்தியுடன் மாத்திரம்  உடலுறவு வைத்தல் (கணவன், மனைவி)
2. எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளல்.
3. பலருடன் உறவு வைத்திருக்கும் எவருடனும் உறவு வைக்காதிருத்தல்.
4. ஓரினச் சேர்க்கையிலிருந்து விடுபடல் அல்லது ஈடுபடாதிருத்தல்.
5. விபசாரிகள், அறிமுகமில்லாதவர்களுடன் உறவு வைக்கும் போதும், ஓரினச் சேர்க்கையின் போதும் ஆணுறையை பயன்படுத்துதல்.
6. போதைப் பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொள்ளும் பழக்கமுடையவர்கள் (பலருடன் சேர்ந்து) அதிலிருந்து விடுபடல்.


சிகிச்சை பெறக்கூடிய இடங்கள்

பாலியல் நோய்கள் தொடர்பாக சிகிச்சையளிப்பதற்காக நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் பிரிவுகள் உள்ளன. இங்கு சென்று இலவசமாக ஒருவர் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாலியல் நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

No comments:

Post a Comment