Wednesday, April 2, 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஒரு அலசல் - எம்.இஸட்.ஷாஜஹான்


(இக்கட்டுரை (2-4-2014) இன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

  கடந்த  சனிக்கிழமை (29-3-2014) நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

தேர்தல் முடிவுகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும்  பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எச்சரிக்கை பலவற்றை விடுப்பதாக அமைந்துள்ளன.
அதேவேளை, மாற்றுத் தீர்வாக  அல்லது தெரிவாக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையம் மக்கள் கருத ஆரம்பித்துள்ளாரகள் என்பதை முடிவுகள்
வெளிக்காட்டுகின்றன.
  மக்கள் இந்த  தேர்தலில் சில விடயங்களை அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தெரிவித்துள்ளனர்.  தேர்தல் முடிவுகளை நன்கு அலசி ஆராய்ந்;தால் அது நன்கு புலப்படும்.
 அதிகார பலத்தையும் அரச வளங்களையும் முழுமையாக பயன்படுத்தியே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியடைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி குறைந்;துள்ளதுடன்   ஆசனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 இலட்சத்து 63 ஆயிரத்து 675 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 6 இலட்சத்து 79 ஆயிரத்து 682 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  கம்பஹா. களுத்துறை மற்றும் கொழும்பு  ஆகிய மூன்று மாவட்டங்கனும் அடங்கும்  மேல் மாகாணசபைத் தேர்தலில்; 56 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களுடன் 33 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடை பெற்ற   மேல் மாகாண சபை  தேர்தலோடு  ஒப்பிடுகையில் இரு கட்சிகளினதும் ஆசனங்கள் குறைந்துள்ளன என்பதே கசப்பான உண்மையாகும். அந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 68 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு  30 ஆசனங்களும் கிடைத்தன. அதேபோன்று, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 59 ஆசனங்களை கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 39 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த தேர்தலில் மேல் மாகாண சபையில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12 ஆசனங்களையும். தென் மாகாண சபையில் 5 ஆசனங்களையும் இழந்துள்ளது. தென் மாகாண சபையில் 2009 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 804,071 வாக்குகளைப பெற்றது. ஆயினும், இம்முறை 699,408 வாக்குகளையே பெற்றுள்ளது.
அதேபோன்று 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற   மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 688,253 வாக்குகள் கிடைத்தன. இம்முறை  நடைப்பெற்ற தேர்தலில் 679,682 வாக்குகளே கிடைத்துள்ளன.  அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை இரண்டு ஆசனங்களை இழந்துள்ளன. ஆயினும்,  தென் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்   இம்முறை 13251 வாக்குகளால் அதிகரித்துள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள சில தேர்தல் தொகுதிகளில்  அதன் வாக்குகள் 2009 ஆம் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளைவிட இம்முறை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு தேர்தல் தொகுதி இதற்கு சிறந்த உதாரணமாகும். 2009 இல் நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் 32475 வாக்குகளைப் பெற்றது. இம்முறை 28763 வாக்குகளையே பெற்றது. 3712 வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 2009 இல் நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் 17823 வாக்குகளைப் பெற்றது. இம்முறை 22687 வாக்குகளைப் பெற்று தனது வாக்குகளை 4864 ஆல் அதிகரித்தக் கொண்டுள்ளது.
 இதேவேளை, சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மேல் மாகாண சபைத் தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், தென் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி. 6 ஆசனங்களையம், தென் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பி ஐந்து ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே வெற்றியடைந்துள்ளன என்பதே உண்மையாகும். சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியடைந்துள்ளதுடன்  மூன்றாவது சக்தியாக தன்னை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது. புதிய தலைமையின் கீழ் தேர்தலில் களமிறங்கிய மக்கள் விடுதலை முன்னணி மக்களின் நம்பிக்கையை ஓரளவு வென்றுள்ளது. இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற தேர்தல்களில் இந்த இரு கட்சிகளும் ஆளும் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக்குகளை  அதிக எண்ணிக்கையில் கபளீகரம் செய்யும் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.

மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண பலம் வாய்ந்த எதிர் கட்சியைத் தேடித் தேடி இறுதியில் அடைக்களம் புகுந்துள்ள கட்சியே சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியாகும். இதன் காரணமாகவே  மக்கள் விடுதலை முன்னணிக்கும் வாக்குகள் அதிகரித்தள்ளன.

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகள், ஊழல், வீண் விரயம், அடக்குமுறை, போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீட்பர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலுவிழந்த நிலையில் யுத்த வெற்றியை பெற்றுத் தந்த  சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியை மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் மீட்பராக கருதுகிறார்கள். அதன் காரணமாக  அக்கட்சி மக்களின் இதயங்களை பெருமளவு வென்றுள்ளதை தேர்தல் பெறுபேறுகள் வெளிக்காட்டுகின்றன.

 மாகாண சபை தேர்தல் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள். சிறு சிறு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள் சிலர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்கள்.

 நடந்து முடிந்த  மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்கள்  இனி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோடிப் பரீட்சையாகும். தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால்   மக்கள்  உரிய பாடத்தை  பெரிய தேர்தல்களின் போது புகட்டுவார்கள.;

இவ்விரு மாகாணங்களிலும் கடைசியாக இடம்பெற்ற 2009 ஆண்டின் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுவது சரியல்ல. இத்தேர்தலை புறம்பாக நேர்க்குங்கள் என்று அமைச்சர் டல் அலக பெரும கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுபபினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி கருத்து தெரிவித்துள்ளார.;

 'இந்த தேர்தலை புறம்பாக நோக்கவதற்கு மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்கள்   முதல் தடைவையாக நடத்தப்படுவதல்ல. முடிவுகளை கடைசி தேர்தலோடு ஒப்படுவதுதான் சரியான ஒப்பீடாகும். அந்த வகையில்  2009 ஆம் நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் தென்மாகாணத்தில் அரசின் வாக்கு பலம் சரிந்துள்ளது. தென் மாகாண சபையில் 38 ஆக இருந்த அரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. 68 வீதமாக இருந்த வாக்கு வங்கி 58 வீதமாக குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு முழுமையாக கவனம் செலுத்திய மாவட்டம் அம்பாந்தோட்டை மாவட்டமாகும். இது ஆளும் குடும்பத்தின் சொந்த மாவட்டமாகும். தேர்தல் முடிவுகளின்படி இந்த மாவட்டத்தில்  ஆளும் தரப்பின் வாக்கு வங்கி 67 வீதத்திலிருந்து 57 வீதமாக குறைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் 68 வீதமாக இருந்த  வாக்கு வங்கி 59 வீதமாக குறைந்துள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 12 இல் இருந்து 10 ஆக குறைந்துள்ளது.
அதேபோன்று காலி மாவட்டத்தில் 68 வீதமாக இருந்த  வாக்கு வங்கி 57. 5 வீதமாக குறைந்துள்ளது. அத்துடன் காலி தேர்தல் தொகுதியையும் அரசு இழந்துள்ளது. காலி மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 16 இல் இருந்து 13 ஆக அரசுக்கு குறைந்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலும் அரசின் வாக்கு வங்கி 69 வீதத்திலிருந்து 58 வீதமாக குறைந்துள்ளது. அங்கு 4 உறுப்பினர்களை அரசு இழந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 69 வீதத்லிருந்து 59 வீதமாக வாக்கு வங்கி குறைந்துள்ளது. ஒரு உறுப்பினரையும் இழந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கம் 7 உறுப்பினர்களை இழந்துள்ளது என்று அஸாத் சாலி வெளியிட்டுள்ள  அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.




முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு?

மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி கொழும்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்புக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்பட வில்லை. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து மூன்று முஸ்லிம்கள்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிக்கு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவருக்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து தலா ஒரு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் . இதன்படி கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பிரதிநிதிகள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று,  கம்பஹா மாவட்டத்திலிருந்து  முஸ்லிம் காங்கிரஸின் சர்பில் மீண்டு:ம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் சார்பில் இரண்டாவது தடைவையாக போட்டியிட்ட நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ். ஏம் சகாவுல்லாஹ்வும் வெற்றி பெறவில்லை.

கொழும்பில் 145,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள போதும் அவர்கள் முஸ்லிம்களை பிரதிநிதித்வுப்படுத்திய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தமது ஆதரவை பெரிதாக வழங்கவில்லை. கம்பஹா மாவட்டத்திலும் அதே நிலைதான் காணப்பட்டது.  கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 வாக்குகளையும். கம்;பஹா மாவட்டத்தில் 17,296 வாக்குகளையும் பெற்றன. இந்த இரு மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளில்; பாரிய மாற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். அந்த வகையில் அந்த கட்சி திருப்தி அடைய முடியாது. காரணம்  எப்போதும் போலவே தேர்தலுக்கு அண்மித்த காலங்களில் அரசாங்கத்தடன் முரண்பட்டுக் கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபடும் முஸ்லிம் காங்கிரஸ்  இம்முறையும் அதனை மேற்கொண்ட போதிலும,;  அல்லது அவ்வாறு நடந்த போதிலும் (நவநீதம் பிள்ளையிடம் கொடுத்த அறிக்கை காரணமாக அரசுடன் முரண்பட்டமை) அது பெரிய வெற்றியை தரவில்லை.

முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது வெறுப்படைந்துள்ளமையே முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வஙகி அதிகரிக்காமைக்கான  பிரதான காரணமாகும். 
முஸ்லிம்களின் கணிசமான அளவு வாக்குகள் வழமை போன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும்அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் விழுந்தது.
.
இதேவேளை, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்பதை நிரூபித்துள்ளது.  தனித்து போட்டியிட்ட அக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் 44156 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றது. ஆயினும், அக்கட்சி கம்பஹா மாவட்டத்தில் 8844 வாக்குகளையே பெற்றது. ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கம்பஹா மாவட்டத்தில் தமிழ் மக்கள்  அதிகம் வாழும் வத்தளை தேர்தல் தொகுதியில் 3,873 வாக்குகளும் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் 1,388 வாக்குகளும்  கிடைத்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில்  வாழும் தமிழ் வாக்காளர்களை அக்கட்சி  சரியாக கவரமுடியாமல் போனமை குறைபாடாகும்.



எது எப்படி இருந்த போதிலும் மக்கள் இந்த தேர்தலில் அதிக அக்கறை செலுத்தவில்லை என்பதே உண்மையாகும்.










No comments:

Post a Comment