அரசியல்வாதிகள் சண்டித்தனம் செய்வது எமது
நாட்டில் புதிதல்ல. மக்கள் பிரதிநிதிகள்; வன்முறைச் சம்பவங்களிலும் சட்டத்தை கையில் எடுத்து தான்தோன்றித்தனமாக நடந்து
கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறும் விடயமாகும். ஊடகங்களும் அவற்றை
முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். வன்முறைகளுக்கே பெயர்போன அரசியல்வாதிகளும்
இருக்கிறார்கள். நாடாளுமன்றம் முதல் உள்ளுராட்சி சபை வரை அதுபோன்ற அரசியல்வாதிகள்
நம்மிடம் நிறைய பேர் உள்ளனர்.
இதுபோன்ற
அரசியல்வாதிகளின் சண்டித்தனமான செயல்களை காவி
உடை தரித்தோர் சிலர் கடந்த இரண்டு
வருட காலமாக செய்து வருவதோடு, அவர்கள் அந்த அரசியல்வாதிகளையும் விஞ்சும் வகையில்
உள்ளனர்.
ஆம், கொழும்பு நிப்போன் ஹோட்டலில் பொதுபலசேனா அண்மையில் சண்டைக் காட்சி ஒன்றை
நடத்தியது. இல்லை. நடித்தது. அதை அச்சு, இலத்திரனியல்
ஊடகவியலாளர்கள் படம் பிடித்தனர். தற்போது அந்தக் காட்சி உலகெங்கும் சின்னத் திரைகளில் செய்திப் படமாக
ஓடிக்கொண்டிருக்கிறது. ஸ்டில்களும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.
பொது பலசேனாவின் ஞானசார
தேரர் தலைமையிலான நடிகர் குழுவினரை இயக்கும் இயக்குனர் மாத்திரம் திரை மறைவில் தலை மறைவாகியிருந்தபடி காட்சிகளை இயக்குகிறார்.
பர்மாவின் நிலை இலங்கையில்?
இந்நிலையில், பொதுபலசேனாவின்
அண்மைக்கால நடவடிக்கைகளை நோக்கும் போது
பர்மாவில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட நிலைமையே எமது நாட்டிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஜாதிக பலசேனா அமைப்பு
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு
செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அத்துமீறி நுழைந்த பொது பலசேனாவின் ஞானசார
தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கு சண்டித்தனம் செய்தமை தொடர்பில்
பொது பலசேனா அமைப்பிற்கு எதிராக
சில அரசியல் கட்சிகளும் , அரசியல் தலைமைகளும், பல்வேறு அமைப்புக்களும் கருத்துக்களை
தெரிவித்து வருகின்றன.
அதில் ஒரு கருத்துதான் முஸ்லிம் காங்கிரஸின்
செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ள மேற்படி கருத்தாகும்.
ஜெனீவா அமர்வும் மேல், தென் மாகாண சபை தேர்தலும்; முடிந்ததன் பின்னர் பொது
பலசேனா முஸ்லிம்களுக்கு எதிரான தனது
அடக்குமுறையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
1990 இல் மன்னார்
மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபலசேனா வன்மையாக எதிர்த்து தற்போதைய
போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்தே ஜாதிக பலசேனா அமைப்பு கொழும்பு
நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த
ஊடகவியலாளர் சந்திப்பை குழப்பியடித்த சம்பவம் இடம்பெற்றது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா உட்பட
பேரினவாத சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுபலசேனாவின் மீது
கோபம் கொள்வதா?
அல்லது பார்வையாளராக
இருக்கும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மீது கோபம் கொள்வதா? அல்லது முஸ்லிம்
அமைப்புக்கள் மீது கோபம் கொள்வதா? அல்லது ஒன்றும் தெரியாதது போன்று
இருக்கும் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்வதா? என்று முஸ்லிம் மக்களில் பலர் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
அவரவர்களுக்கு தோன்றிய
விதத்தில் ஒவ்வொருவரும் மேற்படி தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில், பர்மாவில் முஸ்லிம்
மக்களுக்கு ஏற்பட்ட நிலைமையே எமது
நாட்டிலும் ஏற்பட்டுவிடுமோ என்று ஸ்ரீலங்h முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி
தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம்களில் பலரை
ஏற்கனவே சிந்திக்க வைத்த
விடயமாகும். தற்போதாவது முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் தொடர்பாக தூரநோக்கில்
சிந்தித்து கருத்து (மட்டுமாவது) தெரிவித்துள்ளமை சிறிய ஆறுதலை தருகிறது.
இஸ்லாமிய தலைமைத்துவமும் நமது தலைவர்களும்
இஸ்லாமிய அரசியல் தலைமைத்துவத்திற்கும் ஏனைய அரசியல்
தலைமைத்துவங்களுக்கும் இடையில் பெரும்
வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும்
அல்குர்ஆன் குறிப்பிடும் வழியிலும் நபியவர்கள் காட்டித் தந்த வழியிலும் வாழ
வேண்டியது கட்டாயமாகும். அது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்திற்கும் பொருந்தும்.
அதனை மீறி யாரும் நடந்து கொள்ள முடியாது.
இஸ்லாம் ஒரு பரிபூரண வாழ்க்கை முறையாகும். அது
தலைமைத்துவம் தொடர்பாகவும், தலைமைத்துவம் எவ்வாறு
செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கூறியுள்ளது. நபியவர்கள் அதனைக் சொல்லிலும் செயலிலும் காட்டித் தந்துள்ளார்கள்.
இறையச்சத்தை இதயத்தில் ஏந்தியிருக்கும்
இஸ்லாமிய தலைமைத்துவங்கள் இஸ்லாம் கூறும் வழியிலேயே முழுமையாக நடந்து
கொள்ளும்.
உலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கையின் (மரணித்த பின்னர் உள்ள
வாழ்க்கை) விதை நிலமாக உள்ளது. ஆகவே, இறையச்சத்துடன் வாழும் முஸ்லி;ம் தலைமைத்துவங்கள்
இஸ்லாம் கூறகின்ற வழியிலேயே நடந்து கொள்ளும்.
சுய இலாபங்;களுக்காக அல்ல.
தலைமைத்துவம் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே. தம்மை
அலங்கரித்துக் கொள்வதற்காக அல்ல. அரசியலில் சமயத்தை பயன்படுத்திக்கொள்ளும் எமது
தலைவர்களில் பலர் சமயம் சொல்வதை அரசியலில் பயன்படுத்துவதில்லை. வாழ்க்கையில் கடைப்
பிடிப்பதில்லை. இங்குதான் அவர்களின் போலி முகங்கள் துகிலுரியப்படுகின்றன.
அரசியல் என்பது ஒரு
சாக்கடை அதில் எது வேண்டுமானாலும்
கலக்கலாம். எமது தலைமைகளும் அந்த சாக்கடையில் முழுமையாக விழுந்துள்ளன. உலக அரசியல் சாக்கடையில் விழுந்துள்ள அவர்கள்
ஆத்மீக பூக்கடையை மறந்து அரசியல் செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு நடந்து கொண்டால், பர்மாவில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை எமது நாட்டு முஸ்லிம்
மக்களுக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?
இரண்டு வருடகால தொடர் கதை
தம்புள்ளை பள்ளிவாசல்
பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடகாலமாகிறது. அதன் பின்னர் கடந்த இரண்டு வருட
காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா
உட்பட பேரினவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்
கதையாக தொடர்கின்றன.
ஹலால் பிரச்சினை, ஹபாயா பிரச்சினை, மாடறுத்தல் பிரச்சினை, பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், முஸ்லிம்களின் வர்த்தக
நிலையங்கள் தாக்கப்பட்டமை, முஸ்லிம்களின் வியாபார நிலையங்களுக்கு சிங்கள மக்கள் செல்வதை தடுக்கும் பிரசார
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முஸ்லிம்கள் தொடர்பாக பொய்ப் பிரசாரங்களை பெரும்பான்மையினர் மத்தியில் பரப்பி
வருகிறமை, சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்கின்றமை, முஸ்லிம்கள் மீது அரசியல்
ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க
முயற்சிக்கின்றமை என முஸ்லிம் மக்கள் மீது பொதுபலசேனா உட்பட பேரினவாத
அமைப்புக்கள் தொடர்ச்சியாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவற்றுக்கு எதிராக
முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள், சமய ரீதியிலான
அமைப்புக்கள் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? அவற்றில் எவை
வெற்றியளித்துள்ளன? என்று நன்கு சிந்திக்க வேண்டியுள்ளது.
தமக்குள் ஒன்றுபடாத சமூகம், ஒற்றுமையை பேணாத சமூகம் தமது பொது
எதிரிகளை வெற்றி கொள்ள முடியாது.
'ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்று கூறுவார்கள.; பொது பலசேனா என்ற கூத்தாடிக்கு இது கொண்டாட்டமான காலம். காரணம் முஸ்லிம்கள்
தமக்குள் சமய , சமூக , அரசியல் மற்றும் பிரதேச ரீதியில்
முன்னரைவிட பிளவுண்டு போயிருக்கிறார்கள்.
இலங்கை அரசியலில்
முஸ்லிம்களுக்கு என்று சில கட்சிகள்
உள்ளன. அதுமாத்திரமன்றி, பல்வேறு கட்சிகள் மூலமாகவும் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் உள்ளுராட்சி, மாகாண. நாடாளுமன்ற
ரீதியில் அதிகம் இருந்தாலும், நாங்கள் இன்னும் அரசியல் ரீதியில் பலயீனமானவர்களாகவே இருக்கிறோம.;
மக்களின் வாக்குகளால்
தெரிவு செய்யப்படுபவர்கள் தமது மக்களின் விருப்பங்களை மறந்து அரசியல்
செய்கிறார்கள். அல்லது கட்சி மாறி சுயநல அரசியல் செய்கிறார்கள். மேற்படி
நிறுவனங்களில் முஸ்லிம் பிரதிநித்துவங்கள் எத்தனை இருந்த போதிலும், அவர்களில்
பெரும்பாலானவர்கள் அரசியலில் நம்புசர்களாகவும் கோழைகளாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பதே உண்மையாகும்.
அதேபோன்று , சமய ரீதியிலும் பல்வேறு
அமைப்புக்கள் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றன. அந்த அமைப்புக்களுக்கு
இடையிலும்; கருத்து வேறுபாடுகள். மோதல்;கள். காட்டிக்கொடுப்புக்கள். கழுத்தறுப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன.
ஓற்றுமையெனும் கயிறு
முஸ்லிம்களே ஒற்றுமை
எனும் கயிற்றைப் பற்றிப் பிடியங்கள் அது வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை பின்பற்ற பலரும் மறந்து போய்விட்டார்கள். அதன்காரணமாக
தமது மார்க்கத்திற்கு எதிரான, இனத்திற்கு எதிரான, சமூகத்திற்கு எதிரான
பிரச்சினைகளை எதிர்கொள்ள திராணி அற்றுபோயுள்ளன எமது தலைமைகள்.
மக்கள்; அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
பயன்படுத்தப்பட்டு வீசப்படும் கறிவேப்பிள்ளையாகியுள்ளனர்.
பொதுபலசேனாவின்
அடாவடித்தனங்களுக்கு எதிராக அறிக்கைவிட்டும், பத்திரிகையாளர்
சந்திப்புக்களை நடத்தியும், மேடைகளில் பேசியும் இலாபம் தேடுவதை விடுத்து, முஸ்லிம்களுக்கு
பேரினவாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளை வெற்றிகொள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்வதாக காட்டிக்
கொண்டும், பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸும், அரசாங்கத்துடன்
இணைந்திருக்கும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும்,. ஆளும் தரப்பை அலங்கரிக்கும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்
மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும், எதிர்கட்சிகளை சேர்ந்த
முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒன்றுபட வேண்டும்.
அரசியல் ரீதியில் வேறுபட்டிருக்கும் இவர்கள்
தமது சமயத்திற்கும் இனத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை
தோற்கடிக்க ஒன்றுபட வேண்டிய காலம் இது. அதேபோன்று பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் முஸ்லிம்
தலைமைகளும் அமைப்பக்களும் ஒன்றுபட வேண்டிய காலம் இதுவாகும்.
ஒற்றுமை எனும் கயிற்றைப்
பற்றிப்பிடித்து ஒரே குடையின் கீழ் எமது
பொது எதிரியை எதிர்கொள்ள தயாராகாவிட்டால், பர்மாவில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை எமது நாட்டிலும் ஏற்பட்டுவிடலாம். அது
ஆச்சரியமான விடயம் அல்ல.
முஸ்லிம்கள் ஒற்றுமை
எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டால் அந்தக் கயிறு பேரினவாதிகளுக்கு
தூக்குக் கயிறாக அமைந்து விடும் என்பது மட்டும் உண்மையாகும்.
No comments:
Post a Comment