(இக்கட்டுரை 29-6-2014 அன்றைய
‘தமிழ்த் தந்தி’ வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
சர்வதேச ரீதியில்
இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை
மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு விசாரணைக் குழு
நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில், முஸ்லிம்
மக்களுக்கு எதிராக அளுத்கம, தர்கா நகர்
மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வாழும்
சிறுபான்மை மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.
தமிழ் மக்களுக்கு 1983 ஜுலை
மாதத்தில் இடம் பெற்ற வன்செயல்கள்
மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி
காலத்தில் அநீதி இழைக்கப்பட்டதைப் போன்று, முஸ்லிம்
மக்களுக்கு 2014, ஜுன்
மாதத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி
அரசாங்கத்தின் கீழ் அநீதி இழைக்க இடமளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக
அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச
ரீதியிலும் உள்நாட்டிலும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அளுத்கம சம்பவம்
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு
பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயமாகும்.
பயங்கரவாத
செயல்களை மேற்கொண்டு வந்த விடுதலை புலிகளை தோற்கடித்து நாட்டு மக்களை
காப்பற்றியதாகக் கூறும் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்ஷவின் ஆட்சியில், கடந்த இரண்டு
வருட காலமாக சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்கள் பல்வேறு வகைகளிலும் துன்பங்களையும்
அச்சுறுத்தல்களையும் அனுபவித்து வருகின்றனர்.
தமது அரசியல்
இருப்புக்காகவும் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே நாட்டில் இனவாதம்
பரப்பப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு
தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும், இனவாத, மதவாத குழுக்களின் சட்ட விரோதமான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அரசாங்கம்
அஞ்சுவதாகவே தெரிகிறது.
இந்நிலையில்,
இன்றைய இலங்கையை சகல
அவலங்களில் இருந்தும் மீட்டுக் கொள்வதற்கு, புத்தி சாதுரியமும், விவேகமும் மிக்க ஒரு தலைவரின் தேவையே இப்போது
உணரப்படுகிறது என கலாநிதி தயான் ஜெயதிலக்க தெரிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட
வேண்டியுள்ளது.
இணையத்
தளமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச ரீதியாக மட்டுமன்றி உள்நாட்டிலும் அரசுக்கு எதிரான விமர்சனங்கள்
வலுப்பெற்று வருகின்றன. குரோதங்களும் வன்முறைகளும் அதிகரித்திருப்பதில் மக்கள்
அரசு மீது நம்பிக்கையிழந்து வருகிறார்கள். தனிப்பட்டவர்களின் கரங்களுக்குள்
சட்டமும் ஆயுதமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அவசரமாக இந்நிலைமை மாற
வேண்டுமாயின் புத்தி சாதுரியம் மிக்க புதிய தலைவர் ஒருவரையே நாடு அடைந்து கொள்ள
வேண்டியிருக்கிறது எனவும் தயான் ஜெயதிலக்க
அந்த நேர்காணலில் மேலும்
தெரிவித்திருக்கிறார்.
அதேபோன்று.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவும் இந்த வன்முறைச் சம்பவம்
தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தனி நபர்கள் சிலர் சட்டத்தைக் கையிலெடுத்து
அராஜகம் பண்ணியதைத் தடுக்க இயலாது போனதில் சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் தவறியமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அளுத்கம வன்முறை பௌத்தத்தின் பெயரால்
மேற்கொள்ளப்பட்ட சதியாகும் எனவும், குறிப்பிட்ட
சிலர் குறுகிய சுய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பௌத்த மத்தின் பெயரால்
நிகழ்த்திய மிக மோசமான வன்முறையே இதுவென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக
குமாரதுங்க அளுத்கம, பேருவளை
கலவரங்கள் தொடர்பில் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம்
நவம்பர் மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தல்
அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும்
நிலையில், எதிர்கட்சிகள்
அதற்கு தயாராகி வரும் நிலையில் அளுத்கம,
பேருவளை சம்பவம்
இடம்பெற்றிருக்கிறது. அது மாத்திரமன்றி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொது பலசேனா
அமைப்பு தொடர்ச்சியாக அடாவடித் தனம் செய்து வருவதை கண்டுகொள்ளாமல் இருக்கும்;
நிலையில்தான் பிரதான தேர்தல் ஒன்று நடைபெறும்
என்று எதிர்;பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,
எந்தவொரு குழுவினரும்
சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பொலிஸார் மற்றும்
பாதுகாப்புப் பிரிவினருக்குப் பணிப்புரை வழங்கியிருக்கின்றேன் எனவும், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருக்கிறேன் எனவும் ஜனாதிபதி
தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்டு நாடு ஸ்திரமான நிலைமையொன்றை அனுபவித்துவரும் சூழ்நிலையில் நாட்டில்
ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையிலான
முயற்சிகள் தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ சட்டத்தை கையிலெடுப்பதற்கு எந்தவொரு குழுவுக்கும் அனுமதியளிக்க வேண்டாம்
என்றும் கேட்டுகொண்டுள்ளார்.
நாட்டின்
ஸ்திரத்தன்மையைக் குழப்ப முயற்சிக்கும் சில சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள்
நாட்டின் தற்போதைய நிலைமையை மேலும் மோசமடையச் செய்துவிடும் என்பதை நாம் மறந்து
விடக்கூடாது. நாட்டின் தற்போதைய நிலையை புரிந்து அனைத்து இனக்குழுக்களும் நட்புறவைக்
கட்டியெழுப்புவதற்கும் இனங்களுக் கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கும்
ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுகொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின்
ஸ்திரத்தன்மையைக் குழப்ப சில சர்வதேச
சக்திகள் முயற்சிப்பதாகவும், சட்டத்தைக்
கையில் எடுப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளமை இங்கு முக்கிய விடயமாகும்.
அளுத்கம
இனக்கலவரம் ஒரு வெளிநாட்டுச் சதியெனவும், ஜனாதிபதியின் வாக்கு வங்கியை பிளவுபடுத்தும் நோக்கமே இதற்குக் காரணமெனவும்
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை (23) நடைபெற்ற வைபவமொன்றில்; கலந்து கொண்டு
உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும்
அவரது அமைச்சர்களும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பிடும் அந்த
சர்வதேச சக்தி இருப்பது உண்மையானால,;
அந்த சக்திகளின்
முகவர்களாக செயற்படும் குழுக்கள். அதாவது சட்டத்தை கையில் எடுத்து செயற்படும்
குழுவினருக்கு எதிராக அரசாங்கம் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி
எழுப்புகின்றனர்.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதாக
குற்றஞ்சாட்டி அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட
அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முடியாது என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர்
தலையங்கத்தில் தெரிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஞானசார தேரரை
கைது செய்யுமாறு வற்புறுத்தி உள்நாட்டில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதில் அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும் சில சிங்கள அமைச்சர்களும்
அடங்குகின்றனர். ஆனால், ஞானசார தேரரை
கைது செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.
தன்னை கைது
செய்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
குதிக்கப்போவதாக ஞானசார தேரரர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்
மூலமாக ஒரு விடயம் நன்கு புரிகிறது. தன்னை கைது செய்தால் அல்லது பொது பலசேனாவுக்கு
எதிராக நடவடிக்கை எடுத்தால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பொதுபலசேனா
மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறது. அதேபோன்று, அரசாங்கமும் இதனை புரிந்து கொண்டு நடந்து
கொள்கிறது. அல்லது இரு தரப்பினரும் நடிக்கின்றனர்.
பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக
மாணவர்கள் மற்றும் அமைப்புக்கள்; நடத்தியுள்ள ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பௌத்த தேரர்கள் மீது அரசாங்கம் கண்ணீர்; புகை குண்டு தாக்குதல்களையும் தடியடிப்
பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், கொழும்பு
புறக்கோட்டை அரச மரத்தடி, லிப்டன் சுற்று
வட்டம் ஆகியன அதற்கு சாட்சிகளாகும்.
ஆயினும், பொது பலசேனா
அமைப்பின் தேரர்கள் மீது அவ்வாறு
நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள முக்கிய மறை
கரம் ஒன்றின் ஆதரவு இருப்பதே காரணம் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும், வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சி பற்றி ஜனாதிபதி
உட்பட ஆளும் தரப்பினர் குறிப்பிட்டு வருகின்ற போதிலும் பொதுபலசேனாவுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நேர்வே மற்றும் அமெரிக்காவின் ஆதரவிலேயே பொதுபல சேனா செயற்படுவதாக பகிரங்கமாக
குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அதேபோன்று, பொதுபலசேனா
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மறைமுகமாக செயல்பட்டு வருகிறது என்றும்
குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இதனை
வலியுறுத்தும் வகையில், அளுத்கம மற்றும்
பேருவளை வன்முறைகள் தொடர்பில் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர
பாதுகாப்புச் செயலாளரை குற்றம் சாட்டியுள்ளார்.
அளுத்கம மற்றும்
பேருவளை இனக் கலவரத்திற்கு மூல காரணம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
ஆவார். பாதுகாப்பு செயலாளரே சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கு நிதி
வழங்கியுள்ளார். இந்த அசம்பாவிதத்தின் போது
சட்டம் ஒரு குழுவினரின் கைகளிலேயே காணப்பட்டது. அளுத்கம சம்பவம் திட்டமிட்ட
சதி. இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் பலரின் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்று
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார.;
நாடாளுமன்ற
உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்தை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளமை
தொடர்பாகவும், அளுத்கம சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் பலரின்
பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ள கருத்து பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றதற்காக
பஸ்யாலை பிரதேசத்தில் பொது மகன் ஒருவர் பொலிஸாhhல் சுடப்பட்டு மரணமாகியுள்ள சம்பவம் அண்மையில்
நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை (24) திவுலபிட்டிய பிரதேசத்திலும் நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால்
சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது. சிரஸ 'யூ ரிப்போர்ட்டர்' ஒருவர் அந்த காட்சியை வீடியோ படம்பிடிக்க அந்த
காணொளியை 'சிரஸ' மற்றும் 'சக்தி' தொலைக்காட்சி ஊடகம் தனது செய்தி அறிக்கையில்
ஒளிபரப்பியது.
ஆனால், ஊரடங்கு சட்டம் அமுலில்; உள்ள போது அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளை பிரதேசங்களில்
பொலிஸார் முன்னிலையில் தீ வைப்பு , கொள்ளைச்
சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதும் பொலிஸார்
வேடிக்கைப் பார்த்துள்ளனர.; வன்முறையாளர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை.
அந்த வன்முறை சம்பவத்திற்கு முன்னதாக பௌத்த மக்களுக்கு ஆவேசம் ஏற்படும் வகையில்
கூட்டமொன்றில் உரையாற்றிய ஞானசார தேரருக்கு எதிராக இதுவரை நடவடிக்கை
எடுக்கப்படவில்லை.
ஞானசார தேரருக்கு
எதிராக பொலிஸ் நிலையத்தில் யாரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லையாம். பொலிஸார்
முன்னிலையிலேயே வன்முறை இடம்பெற்றிருக்கிறது என்பதை பொலிஸார் மறுக்க முடியாது.
ஞானசார தேரர் ஆற்றிய ஆவேச உரை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வன்முறைகளின்
காணொளிகள் இணையங்களில் தாராளமாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட
வேண்டியுள்ளது.
இந்த வன்முறைகள்
தொடர்பில் விசேட விசாரணைகளுக்காக 20 பொலிஸ்
குழுக்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தெரிவித்துள்ளார் இந்த குழுக்கள் தமது கடமையை சரியாக செய்யுமா? என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாக
உள்ளது.
இதேவேளை, இந்த அசம்பாவிதங்கள் குறித்து விசாரணை
நடத்துவதற்கு அதிகாரங்களைக் கொண்ட வலுவான ஆணைக்குழு ஒன்று அரசாங்கத்தால் உடனடியாக
நியமிக்கப்பட வேண்டும் என்று ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளான லங்கா
சமசமாஜக் கட்சி, இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ஜனநாயக
இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு
அனுப்பப்படும் இந்த கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இந்த வலுவான ஆணைக் குழுவின்
விசாரணை மக்களுக்கு நம்பிக்கை தரலாம்.
எப்படியோ,
அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில்
ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர்
என்ற வகையிலும் ஜனாதிபதியே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும். ஜனாதிபதியவர்கள் இந்த
கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும். சட்டத்தை கையில்
எடுத்து நடந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஸ்டயீட்டை விரைவில் வழங்க வேண்டும். மீண்டும் ஒரு
முறை இது போன்ற இன வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அமைதியையும்
ஒற்றுமையையும் சமாதானத்தையும் விரும்பும் சிங்கள பௌத்த மக்கள் இது போன்ற ஒரு
கறுப்புக் கலவரம் மீண்டும் இடம்பெறுவதை விரும்பமாட்டார்கள். இதனை ஆளும் தரப்பினர்
புரிந்து நடந்து கொள்ளாவிட்டால், மக்கள் அதனை அரசாங்கத்திற்கு புரிய வைக்கும் காலம்
வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகும்.
No comments:
Post a Comment