Monday, July 28, 2014

கலவரங்களின் விசாரணை நீதியாக இடம்பெற வேண்டும் - தேச நேசன்

 (இக்கட்டுரை  6-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.) 

சிங்களத்தில் இவ்வாறு கூறுவார்கள். 'நடுத் ஆமுதுருவன்;கே. படுத் ஆமுதுருவன்;கே' 'வழக்கும் நீதிபதியுடையது. பொருட்களும் நீதிபதியுடையது' என்பது அதன் அர்த்தமாகும்.  அளுத்கமை வன்முறைச் சம்பவத்தை  பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரிப்பது அது போன்றதுதான்.
ஆம், கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸாரும்
புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணை தொடர்பாக பல்Nவுறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை மேற்கொள்வதை முஸ்லிம் காங்கிரஸ்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சில தரப்பினர் வேண்டியுள்ளனர்.

பொலிஸாரின் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவத்தை பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பாக விசாரணை செய்ய மூவினங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.;

கடந்த 15ம் திகதி அரங்கேற்றப்பட்ட இனச சுத்திகரிப்புக்கான ஒத்திகை சம்பவங்களின் போது சம்பவித்த அழிவுகள் உயிரிழப்புக்கள் என்பனவற்றை விசாரணை செய்வதற்காக பொலிஸாரும் உளவுப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான விசாரணைகளின் போது வெளிப்படைத் தன்மை பேணப்படுமா? என மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. வட்டரக்கதேரர் தன்னைத்தானே காயப்படுத்தியதாக வரும் செய்திகளையும், வெலிப்பிட்டிய என்ற கிராமத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப் பலியாகிய இருவரின் மரண சான்றிதழில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களால் உயிர் துறந்ததாக குறிப்பிட்டுள்ள மாறுபட்ட கருத்துக்களையும் உதாரணமாக கொண்டு அனுமானித்தால் முஸ்லிம் மக்கள் தங்களது வீடுகளையும் வியாபாரஸ்தலங்களையும் தாங்களே அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று முடிவுகள் வெளிவந்து விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

 விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதற்கான நம்பகத்தன்மை கொண்ட பொறிமுறை கையாளப்பட வேண்டும். மூன்று சமூகங்களையும் உள்ளடக்கிய அனுபவம் வாய்ந்த துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டு குறுகிய கால எல்லைக்குள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை ஆணைக்குழுவே பரிசீலிக்க வேண்டும்.  ஏற்கனவே நடந்து முடிந்த அவலங்களின் போது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் கடமையைச் சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை அவர்களே மேற்கொள்வதென்பது மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும். விசாரணைகளை ஆரம்பிக்கும் போது பொலிஸ் மா அதிபரும் பொதுபலசேனா செயலாளரும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும் என்று முஸ்லிம் காங்கிரஸின்  அந்த அறிக்கையில் மேலும் குறிப்;பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அசம்பாவிதங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு  அதிகாரங்களைக் கொண்ட  வலுவான ஆணைக் குழு ஒன்று அரசாங்கத்தால் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஆளும் ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்  இந்த கோரிக்கை  ஏற்கப்பட வேண்டும். இந்த வலுவான ஆணைக் குழுவின் விசாரணை மக்களுக்கு நம்பிக்கை தரலாம் என்று அந்த இடதுசாரி கட்சிகள் குறிப்பிட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அதேபோன்று,  இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்துவதற்கு அரசு ஆணைக்குழு ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று  மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான எம்.எம். அம்ஜாத் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நீதியான விசாரணை மேற்கொள்வதற்காக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த இன வன்முறைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரை குற்றம்சாட்டியுள்ள நிலையில்,பாதுகாப்புத்  தரப்பினரே இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வது திருடனிடமே திருட்டுச் சம்பவத்தை விசாரணை செய்ய ஒப்படைத்த கதையாய் ஆகிவிடும் என்று சுட்டிக்காட்ப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழு அமைக்கும் அரசாங்கம், அளுத்கம வன்முறைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இதுவரை ஆணைக்கு குழுவொன்றை அமைக்காதது வியப்பாகவுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறதா என்ற சந்;தேகம் எழுகிறது. அல்லது  தேவை இல்லை என நினைக்கிறதோ தெரியாதுஎமது நாட்டை பொறுத்தவரையில் ஆணைக்குழு என்பது காலத்தை கடத்தும் தந்திரம் என்பதை கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் நிரூபித்துள்ளன.

அந்த தந்திரம் இந்த  சம்பவத்தில் பலிக்காது என்பது அரசுக்குத் தெரியும். காரணம் இந்த சம்பவம் தொடர்பில்  அவ்வாறு காலத்தை கடத்த முடியாது. நடந்த உண்மைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நஷ்டயீடு வழங்க வேண்டியுள்ளது. எனவே பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மூலமாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆயினும், இந்த வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரிகளை கைது செய்ய, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, அவர்களை ஒடுக்க  அரசு தயங்குகிறது.,

எனவே, ஆணைக் குழுவை அமைத்து விசாரணை செய்யுமாறு பணித்தால் பௌத்த பேரினவாதிகள் குற்றவாளிகளாக இனங்காணப்படுவார்கள். பொதுபலசேனாவின் முக்கிய புள்ளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்படும். வன்முறைச் சம்பவம்   இடம்பெற்ற போது உரிய நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் தரப்பினர் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாவார்கள். பாதுகாப்பு அமைச்சு, அதன் உயர் அதிகாரிகள், மற்றும் அரசாங்கத்தின் மீது அவப் பெயர் ஏற்படும் என அரசாங்கம் தயங்கலாம்.

எமது நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் அண்மையில் நடந்த சம்பவங்களை வெறுப்பவர்களாகவே உள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களின் வேதனைகளில் பங்கு கொண்டு கவலைப்படுகின்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பன எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி சகலருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் விரும்புவது போன்று, அந்த பெரும் எண்ணிக்கையான பெரும்பான்மை சமூகத்தினரும் விரும்புகின்றனர்.

நாட்டு மக்கள் பல தியாகங்களைச் செய்து பெற்றுக்கொண்ட அமைதிக்கு சிறுபான்மையினரான ஒரு சில குழுக்களால் களங்கம் ஏற்பட இடமளிப்பது மேலும் ஒரு அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும். எனவே, விசாரணைகள் நம்பகத்தன்மை கொண்டவையாக அமைய வேண்டும.; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இந்நிலையில், அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி, எதிர்;கட்சித் தலைவர் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் சம்பவம் இடம்பெற்ற இடங்களுக்கு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளனர். சில அரசயல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்துள்ளனர்.

அவ்வாறு பார்வையிட்ட  அரசியல் தலைவர்கள் சம்பவம்  தொடர்பில் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். சில அரசியல்வாதிகள் சம்பவம் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று பார்வையிடாமலேயே கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலரது கருத்துக்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும்  செயலாக உள்ளது.
ஏவ்வாறாயினும், இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.  அதற்காக வலுவான ஆணைக்குழு  ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது நம்பிக்கை தருவதாக அமையும். அது மாத்திரமன்றி சர்வதேசம் இந்த விடயம் தொடர்பாக அவதானித்து வருகிறது. 
எதிர்கட்சிகள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுகிறது என்று குற்றச்சாட்டு தெரிவிப்பதை  நிறுத்திவிட்டு அரசாங்கம் இந்த விசாரணையை சகல தரப்பினருக்கும் நம்பிக்கைத் தரும் வகையில் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஸ்டயீட்டை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட வேண்டும்.


No comments:

Post a Comment